×

அமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு குழியில் ஒளிந்த அதிபர் டிரம்ப்: 40 நகரங்களில் தடை உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் என்ற கருப்பின வாலிபர் போலீசாரால் கொல்லப்பட்டதை கண்டித்து ஆறாவது நாளாக நேற்று முன்தினமும் பயங்கர கலவரங்களும், வன்முறைகளும் அரங்கேறின. அதிபர் மாளிகையை கலவரக்காரர்கள் சூழ்ந்துக் கொண்டதால், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வன்முறைகளால் 40 நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபோலீஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கழுத்தில் கால்வைத்து மிதித்து கொல்லப்பட்டார். ஜார்ஜ் கெஞ்சி கேட்டும் போலீஸ் அதிகாரி தனது காலை எடுக்காதது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த ஆறு நாட்களாக அங்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. போராட்டங்களின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளில் நிகழ்ந்திராத மிகவும் மோசமான அமைதியின்மை இது என கருதப்படுகின்றது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை கண்டித்து சுமார் 140 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 20 மாகாணங்களில தேசிய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டதாக 2.564 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 40 நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிலடெல்பியா நகரங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆங்காங்கே தடியடி நடத்தியதோடு, மிளகு ஸ்பிரே அடித்து வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். பாஸ்டனில் போலீசாரின் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. நியூயார்க்கில் போராட்டக்காரர்களால் சாலைகள் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டங்கள் தொடர்கின்றன. நேற்று முன்தினம் இரவும் வெள்ளை மாளிகை அருகே திரண்ட ஏராளமானோர் அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கிருந்த கட்டிடத்தின் ஜன்னல்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கார்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா, அதிபரின் மகன் பாரன் உள்ளிட்டோர் பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் நேற்று முன்தினம் டிலேவேரில் போராட்டம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் டிவிட்டர் பதிவில், “நாம் வலிமிகுந்த நாட்டில் இருக்கிறோம். ஆனால் இந்த வலி நம்மை அழித்துவிடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

ஹூஸ்டனில் ஜார்ஜ் இறுதிச்சடங்கு
மின்னிபோலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியின் பிடியில் சிக்கி உயிரிழந்த கருப்பர் ஜார்ஜ் பிளாய்ட் இறுதிச் சடங்கு அவரது சொந்த நகரான ஹூஸ்டனில் நடைபெறும் என மேயர் சில்வஸ்டர் டர்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் சில்வஸ்டர் கூறுகையில், “ஜார்ஜ் பிளாய்டின் இறுதிச்சடங்கு வரும் சனியன்று நடத்துவதற்கு தி்ட்டமிடப்பட்டுள்ளது. இது நமது வீடு. இந்த நகரில் தான் ஜார்ஜ் பிலாய்ட் வளர்ந்தார். அவரது சடலம் இந்த நகருக்கு திரும்பி வருகிறது. அவரது நகருக்கு வருகிறது.” என்றார்.

பல்வேறு இடங்களில் கடைகள் சூறை
ஜார்ஜ் பிலாய்ட் மரணத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் அத்துமீறி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் கடைகளை அடித்து நொறுக்கி அங்கிருக்கும் பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். போர்ட்லாந்தில் உள்ள லூயிஸ் வுட்டான் கடையின் கண்ணாடி கதவுகளை போராட்டக்காரர்கள் உடைத்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். போராட்டக்காரர்கள் ஆளுக்கு ஒன்றாக விலையுயர்ந்த பொருட்களை பைகளில் அள்ளி செல்லும் வீடியோக்கள் இணையதளத்தில் உலா வருகிறது.


Tags : Trump ,US ,President , President Trump lurks, violent bunker,e US
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...