கொரோனா பாதிப்பு 23,495 ஆக உயர்வு தமிழகத்தில் 2ம் நாளாக ஆயிரத்தை தாண்டியது: சென்னையில் 964 பேர் பாதிப்பு, இறப்பு 9

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2ம் நாளாக பாதிப்பு ஆயிரத்தை  தாண்டியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 11,377 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டத்தில் அதிகபட்சமாக சென்னை 964, செங்கல்பட்டு 48, திண்டுக்கல் 5, காஞ்சிபுரம் 9, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி தலா 2 பேருக்கும், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை தலா 1 நபருக்கும், ராணிப்பேட்டை 5, சேலம் 10, தஞ்சாவூர் 4, திருவள்ளூர் 33, திருவண்ணாமலை 10, வேலூர் 3, விழுப்புரம் 8 என 1,112 பேருக்கும், அதைப்போன்று அரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 1 நபருக்கும், டெல்லி 10, கர்நாடகாவில் இருந்து வந்த 3 பேர் என 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரே நாளில் தமிழகத்தில் 1,162 கொரோனா தொற்று உறுதியானது. அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 413 பேர் குணமாகியதை தொடர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 13,170 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் தனியார் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த 72 வயது ஆண், 64 வயது ஆண், 45 வயது ஆண், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயது பெண், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது பெண், 57 வயது பெண், 64 வயது ஆண், 80 வயது ஆண், 75 வயது ஆண், 31 வயது பெண் என 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 685 ஆண்கள், 473 பெண்கள், 4 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 14,750 ஆண்கள், 8,732 ெபண்கள், 13 திருநங்கைகள் என 23,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 636 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகத்தான் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையிலும் இதுவரை 500, 600 என இருந்தது தற்போது நேற்று முன்தினம் 804 எனவும், நேற்று 964ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம், ரயிலில் வந்தவர்களுக்கும் தொற்று தமிழகத்திற்கு விமானம், பேருந்துகள், சாலை மார்க்கமாக வந்தவர்களில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் மூலம் அழைத்து வந்த தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories: