மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவு: புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

* விசைப் படகுகளை சீரமைப்பதில் தீவிரம்

* 18 கிராம பஞ்சாயத்தார் அதிரடி முடிவு

புதுச்சேரி: மத்திய அரசிடமிருந்து தாமதமான அறிவிப்பு வந்ததால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் பெரும்பாலான மீனவர்கள் விசைப்படகுகளை சரிசெய்யாததால் இன்று தொழிலுக்கு திரும்பவில்லை. ஜூன் 5ம்தேதி முதல் கடலுக்கு செல்ல 18 கிராம பஞ்சாயத்தார் முடிவு செய்துள்ளனர். வருடந்தோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மத்திய அரசு மீன்பிடி தடைகாலத்தை அமல்படுத்தி வருகிறது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம்தேதி (61 நாட்கள்) மீன்பிடி தடைக்காலம் இந்தாண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் இந்தாண்டு மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் மீன்பிடி தடைக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஜூன் 1ம்தேதி முதல் தமிழகம், புதுவையில் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மத்திய அரசு திடீரென மீன்பிடி தடைக்காலத்தை குறைத்ததால் காலதாமதமாக படகுகளை சரிசெய்யும் பணியை உரிமையாளர்கள் தொடங்கியதால் இன்னும் அவை முழுமையாகாமல் உள்ளது. இதன் காரணமாக 18 மீனவ கிராம பஞ்சாயத்தாரும் நேற்று கூடி இதுதொடர்பாக ஆலோசித்தனர்.

இதில் படகுகள் புனரமைப்பு பணி முடிக்கப்படாமல் இருப்பதாலும், வடகிழக்கு பருவமழை தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாகவும் மேலும் சில நாட்கள் கழித்து ஜூன் 5ம்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடிவெடுத்தனர். அதன்படி புதுவையில் விசைப்படகு, பைபர் படகு மீனவர்களில் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் கட்டுமர மீனவர்கள் வழக்கம்போல் தொழிலுக்கு சென்றனர். இருப்பினும் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மீனவ கிராமங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதுகுறித்து தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகளை புனரமைக்கும் பணியிலிருந்த மீனவர்களிடம் கேட்டபோது, மத்திய அரசு காலதாமதமான அறிவிப்பு காரணமாக படகுகளை சரிசெய்யும் பணியை விரைந்து முடிக்க இயலவில்லை. இதனால் மேலும் 4 நாட்கள் கழித்து தொழிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். தற்போது படகுகளை முழுமையாக சீரமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். மாநில அரசு மீனவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு இந்தாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: