காரைக்குடி அருகே ஊர்கட்டுப்பாட்டால் கிலோ ரூ.360க்கு ஆட்டிறைச்சி: குவியும் அசைவ பிரியர்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகே பனங்குடியில் ஆட்டு இறைச்சி ரூ.360 விற்பனை செய்யப்படுவதால் மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அசைவ பிரியர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் இறைச்சி விலை முன்பு இருந்ததை விட தற்போது ஊரடங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதில் ஆட்டு இறைச்சி விலை வின்னை முட்டும் அளவில் ரூ. 800 முதல் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக ஆட்டிறைச்சியை வாங்க முடியாமல் பலர் பிராய்லர் கோழிக்கு மாறி உள்ளனர்.

இந்நிலையில், காரைக்குடி அருகே பனங்குடியில் உள்ள அப்துல் ஹமீது என்பவர் கடையில் மட்டும்  ஊர் கட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.360 விற்பனை செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விலை குறைவாகவும், அதே நேரம் தரமாக விற்பனை செய்வதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, கல்லல் என மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வந்து இறைச்சி வாங்கி செல்கின்றனர். சாதாரண நாட்களில் 5 ஆடுகள் வெட்டும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை 15 ஆடுகளுக்கு மேல் வெட்டப்படுகிறது.

இதுகுறித்து அசாருதீன் கூறுகையில், ‘எனது தந்தை அப்துல் ஹமீது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். எங்களுக்கு குருந்தம்பட்டு விளக்கு, சொக்கநாதபுரம், செம்பனூர், மறவமங்கலம், காளையார்கோவில், வெற்றியூர், பனங்குடி ஆகிய இடங்களில் கடை உள்ளது. மற்ற கடைகளில் கிலோ ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்கிறோம். பனங்குடியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருவிழாவில் ஊரார்கள் கூடி கடை நடத்த அனுமதியளிப்பார்கள். அவர்களே விலையும் நிர்ணயம் செய்வார்கள்.

இந்த ஆண்டு ரூ.360க்கு விலை நிர்ணயம் செய்துள்ளதால் அதே விலையில் விற்பனை செய்து வருகிறோம். ஊர் கட்டுப்பாடு காரணமாக ஒரு கடை மட்டும் தான் நடத்த வேண்டும். சந்தை மற்றும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று குட்டிகளை வாங்கி வளர்த்து விற்பனைக்கு பயன்படுத்துவதால் எங்களுக்கு கட்டுப்படியாகிறது’ என்றனர்.

Related Stories: