வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் நேற்று அதிகபட்சமாக 1,149 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தளர்வுகள் அதிகரிக்கும் நிலையில், கூடுதல் படுக்கைகளுடன் மருத்துவமனைகள் தயார்படுத்தப்படுகின்றன. ரயில்கள், விமானங்கள் மூலம் வரும் தொற்று தொடர்பாக எதிர்வரும் சூழல்களை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் முதல்வர் காப்பீடு கட்டணம் மற்றும் சிகிச்சை கட்டணம் தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்படும். கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான கட்டணத்தை அரசு உறுதி செய்யும். கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது. சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை எனவும் கூறினார்.

Related Stories: