×

காற்றை மின்சாரமாக்கும் காற்றாலை!

காற்றுத் திறன் (Wind Power) அல்லது காற்று மின்சாரம் (Wind Electricity) என்பது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் முறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின்திறன் செலுத்தல் தொகுதிகளில் (Power transmission module) இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனைய ஆற்றல் முறைகளுடன் ஒப்பிடும்போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி  மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன்கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் முதலில் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புரூஸ் என்பவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் 12 கிலோவாட் நேர் ஓட்ட மின்சாரத்தை மதிப்பீடு செய்தது. 1920 நடுப்பகுதிகளில் அமெரிக்காவில் ஒன்று முதல் மூன்று கிலோவாட் காற்று மின்சாரம் பரிஸ்-டன்ஸ் போன்ற கம்பெனிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டது. 1956ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிகளைக்கொண்ட காற்றுச்சுழலி யொகனீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட்டது.

1975-ல் அமெரிக்காவின் எரிசக்தித் துறை பயன்பாட்டளவில் காற்றுச் சுழலிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது. காற்றுச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை பல நூற்றாண்டுகளாக விருத்தியடைந்துவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டளவில் டென்மார்க் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. மேலும், உலகின் 83 நாடுகள் காற்று மின்சாரத்தை வணிக நோக்கு அடிப்படையில் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் தினசரி சராசரி மின்தேவை 14,000 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவை காற்றாலை மின் உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது. காற்றாலை நிறுவனங்கள் விற்பனை செய்யும் மின்சாரத்தை மின்வாரியம் பணம் கொடுத்து வாங்கி நுகர்வோருக்கு அளிக்கிறது. தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது.

Tags : Wind, power, windmill
× RELATED காற்றாலை தொழிற்சாலையில் தொழிலாளிக்கு கொரோனா