இந்தியாவில் உளவு பார்த்ததாக 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: இந்தியாவில் உளவு பார்த்ததாக பிடிபட்ட 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சட்ட அமலாக்கத்துறையினரால் பிடிபட்டுள்ளனர். அவர்கள் இருவரும், தூதரக பணியில் ஈடுபடுவதற்கான தகுதி அற்றவர்கள். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இரு பாகிஸ்தான் அதிகாரிகள் எதை உளவு பார்த்தார்கள், எப்படி பிடிப்பட்டார்கள் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் இந்த தகவலை பாகிஸ்தான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அது தனது அறிக்கையில், ‘இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு எதிராக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் யாரும் எந்த தவறான செயல்களில் ஈடுபடவில்லை’ என விளக்கம் அளித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தூதரகங்களின் அதிகாரிகள் மீது உளவு புகார்களை இதற்கு முன்பும் பலமுறை சுமத்தி உள்ளன. ஆனால் தற்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. சீனாவும் எல்லையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: