கருப்பின காவலாளியை போலீஸ் கொன்ற விவகாரம் போராட்டத்தை தடுக்க முக்கிய நகரங்களில் தடை உத்தரவு

* அமெரிக்காவில் அதிரடி

* பல இடங்களில் வன்முறை

வாஷிங்டன்:  அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின காவலாளியை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதை கண்டித்து அமெரிக்–்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. மக்கள் அதிகளவில் போராட்டத்தில் கூடுவதால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மின்னியாபோலிசில் தொடங்கிய இந்த போராட்டம், வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகை வரை நேற்று வந்து விட்டது. ஏராளமான போராட்டக்காரர்கள் அங்கு திரண்டதோடு, பாதுகாப்பு தடைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், புளோரிடாவில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிபர் டிரம்ப் சென்றிருந்தார். பிளடெல்பியாவில் அமைதியாக தொடங்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 4 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், 13 அதிகாரிகள் காயமடைந்தனர்.லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், சாலையில் நின்றிருந்த போலீசாரின் காருக்கு தீ வைத்தனர். நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளதால் முக்கிய நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த வியாழன் தொடங்கி இதுவரை 16 நகரங்களில் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘நாய்களை ஏவி விட்டிருப்பேன்’

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது பற்றி டிவிட்டரில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெள்ளை மாளிகை முற்றுகை போராட்டத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மிக அமைதியாக எதிர்கொண்டனர். போராட்டக்காரர்கள் யாரும் வெள்ளை மாளிகை வேலியை தாண்டவில்லை. நல்லவேளை அவர்கள் தாண்டியிருந்தால், ஆக்ரோஷமான நாய்களையும், பயங்கர ஆயுதங்களையும் சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்கும்,’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வரும் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவிவிட்டிருப்பேன் என கூறியிருப்பது அரசியல் ரீதியாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கூட்டத்தில் புகுந்த லாரி

புளோரிடாவில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் திரண்ட கூட்டத்தில் திடீரென லாரி புகுந்தது. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது. லாரியை மடக்கி பிடித்த போலீசார், அதில் இருந்த நபரை கைது செய்தனர். அவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Related Stories: