×

அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக கொரோனாவுக்கு எதிரான போர் பலவீனமாகி விடக்கூடாது: மன் கி பாத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் கொரோனாவுக்கு எதிரான நமது போர் பலவீனமாகி விடக்கூடாது,’’ என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி தனது 65வது மன் கி பாத் (மனதின் குரல்) உரையில் நேற்று பேசியதாவது:  கொரோனா பாதிப்பினால் ஏழைகள், தொழிலாளர்கள் பட்ட வலிகள், வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்கி ரயில்வே சற்று கூடுதலாக உழைத்துள்ளது. கொரோனாவால் புதிய சவால்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கற்றுக் கொண்டுள்ளோம். இது, எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும், படிப்பினையாகவும் உள்ளது.
 
நமது கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் சுய சார்பு உடையவையாக இருந்திருந்தால், இன்று நாம் எதிர்கொண்டுள்ள பிரச்னை இவ்வளவு பூதாகரமாக இருந்திருக்காது. சுய உதவி குழுக்கள் மூலம் முகக்கவசம் வழங்குதல் முதல் ஆன்லைன் கல்வி வரை அனைத்திலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர். ஊரடங்கின் ஆரம்பத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் திறந்து விடப்பட்டு இருக்கின்றன. அதே நேரம், சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான நமது போர் பலவீனமாகி விடக் கூடாது. இல்லை என்றால், நாமும் நம் வீட்டாரும் மிகவும் பாதிக்கப்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்க்கை வரலாறு புத்தகம்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருப்பதை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எழுதிய `நரேந்திர மோடி செழிப்பின் தீர்க்கதரிசி & உலக அமைதியின் தூதர்’ என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகம் கடந்த வெள்ளிக்கிழமை ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதில், மோடியின் சிறு வயது புகைப்படங்களும் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசிய சம்பவங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகள், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் கிடைக்கிறது.

யோகா நிகழ்ச்சிக்கு அழைப்பு
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இம்மாதம் ஆயுஷ் அமைச்சகம் நடத்தும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். பல நாடுகளின் தலைவர்களுடன் பேசிய போது, அவர்கள் யோகா, ஆயுர்வேத‍த்தில் ஆர்வம் உடையவர்களாய் இருப்பதை கவனித்தேன். ஹரித்துவார் முதல் ஹாலிவுட் வரை வீட்டில் இருந்தபடி அனைவரும் யோகா, ஆயுர்வேத‍த்தில்  கவனம் செலுத்துகின்றனர். உண்மையாகவே சமூகம், நோய் எதிர்ப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்கு யோகா மிகவும் நல்லது,’’ என்றார்.



Tags : war ,Corona ,Modi ,government , War against Corona ,weaken , state-sanctioned reforms,PM Modi warns ,Man Ki Baat
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...