இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதல் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவுக்கு ராணுவம் எதிர்ப்பு: ஊடகங்களுக்கு வேண்டுகோள்

புதுடெல்லி: இந்திய - சீன ராணுவம் இடையே லடாக்கில் உள்ள பான்காங், கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக் மற்றும் டவுலத் பெக் ஓல் பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. சிக்கிமின் டோக்லாமில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த இருதரப்பு மோதலுக்குப் பிறகு, தற்போது இதுபோன்ற சூழல் எல்லையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்களும், சீன வீரர்களும் மோதலில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது.இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீடியோ காட்சியில் உள்ளவை தவறானது. இந்த வீடியோவை வடக்கு எல்லையில் நிலவும் சூழலோடு ஒப்பிட முயற்சிப்பது நல்லெண்ணமற்ற செயலாகும்.

இரு நாட்டு வீரர்களுக்கும் இடையேயான வேறுபாடுகளுக்கு இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை  மூலமாக தீர்வு காணப்படும். தற்போது, எல்லையில் எந்த மோதலும் இல்லை. தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் பரபரப்பாக்கும் முயற்சிகள் கண்டனத்துக்குரியது. எல்லையில் தற்போது நிலவும் அமைதியான சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: