×

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி எண் நீதிபதிகள் இருமுறை டயல் செய்தும் ‘கொர்..’: அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட உதவி எண்கள் செயல்படவில்லை என்பதை நீதிபதிகளே அந்த எண்ணில் அழைத்து சோதித்து தெரிந்து கொண்டதால் இந்த உதவி எண்களை 24 மணி நேரமும் சரியாக செயல்படுமாறு வைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க உதவி எண்களை அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.கதிர்வேல் ஆஜரானார். அப்போது, அரசுத் தரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக  உதவி எண் தரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை இந்த வழக்கின்மூலம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக அரசு அமைத்துள்ள உதவி எண் செயல்படவில்லை. நாங்களும் அந்த எண்ணில் அழைத்து பார்த்தோம் எந்த பதிலும் வரவில்லை. அந்த எண் செயல்பாட்டில் இல்லை. இதை சாதாரணமாக கருத முடியாது. 24 மணி நேரமும் செயல்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். ஆனால், நாங்கள் 2 முறை அந்த எண்ணில் அழைத்தும் பயன் இல்லை. தேவையானவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த உதவி எண் செயல்படவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை எப்படி கேட்க முடியும். எனவே, இந்த உதவி எண்ணை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கும் வகையில் சரிசெய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் உதவி எண்களை முழு அளவில் செயல்படுத்துவது குறித்து 2 வாரங்களுக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Judges ,Corr , number, judges , assistance number, differently abled ..
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...