×

இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்

சென்னை: இலவச மின்சார திட்டத்தை  ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜக  அரசுக்கு  அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை அனைத்துக்கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்தகூட்டத்தில் திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகீதின், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயாலாளர் ஈஸ்வரன், ஐஜெகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய பா.ஜ.அரசுக்கு கடும் கண்டனம்.

 * மத்திய தொகுப்பிற்கு அனைத்து மாநிலங்களும்  முதுநிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்துள்ள இடங்கள் பூஜ்யமே. மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை வஞ்சிப்பதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
* மருத்துவ மேற்படிப்புக் கல்வி ஒழுங்குமுறை 2000 ன்படி, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு தமிழக அரசு ஒப்படைக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை, எந்தவிதக் குறைப்பாடும் இன்றி, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும்.
* அதிமுக அரசு இதிலும் “விபரீத விளையாட்டு” நடத்தாமல் மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும்;  அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
*  உள்நாட்டு  மொத்த  உற்பத்தியில்  10  சதவீதமான   20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிவாரணத் திட்டம் என்று அறிவித்த பிரதமர் மோடி அவரது நிதியமைச்சர் மூலம்,  1.86 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீத பொருளாதார நிவாரணத் திட்டத்தை மட்டும் வெளியிட்டு, நாட்டு மக்களை ஏமாற்றியிருப்பதோடு, மாநில அரசுகள் கோரும் நிதியையும் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
* பொருளாதார ரீதியாக, கீழ் படிநிலைகளில்  உள்ள  50 சதவீத குடும்பங்களுக்கு, ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்பதையோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மறு வாழ்விற்கு தேவையான பண உதவி செய்திட வேண்டும் என்பதையோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதையோ, சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு.
*  கொரோனா நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில் தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு “கொரோனா நோயை” கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி கண்டு விட்டது.
* கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்போர்க்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும் மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோர்க்கு 5000 ரூபாயும் வழங்கிட வேண்டும் எனவும்  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
* தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர்  முதலமைச்சராக இருந்த போது அறிமுகப் படுத்தப்பட்டு  அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு, வேளாண்மை முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்துவரும்  இலவச மின்சாரத் திட்டத்தை  ரத்து செய்யவும், அதன் மூலமாக மாநில உரிமைகளை மேலும்  பறித்திடவும்,  உள் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனம்.
* விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டு வரப்படும்;  இந்த “புதிய மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவை” உடனே திரும்பப் பெற வேண்டும்.
*  மிக முக்கியப் பணியில்  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட அரசு ஊழியாளர்கள் அனைவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுகிறது. ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கு நன்றி ; இனி வரும் நாட்களிலும் அரசின் “சுகாதார அறிவுரைகளுக்கு” மதிப்பளித்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து- சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடிகளாக விளங்கிட வேண்டும்.

Tags : government ,party meeting , Central government,abolishing ,electricity scheme and denying, state rights,condemnation,meeting
× RELATED இலவச மின்சாரம் திட்டம் தமிழக...