கொரோனா தொடர்பாக ஆலோசனை; டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடுகிறது

டெல்லி: கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த மே மாதம் 12-ம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அதற்கு மறுநாள் 13-ம் தேதியில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்தார்.

கடைசியாக, 5வது கட்டமாக கடந்த 17-ம் தேதி பிற்பகல் 11 மணிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா தாக்கம் காரணமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து, மாநில அரசுகளும், சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, தற்சார்பு இந்தியா திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் கடந்த வருடம் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: