மைனர் பிள்ளைகளை அழைத்து வர அனுமதி; மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சமூக வலைதளங்களில் பிரசாரம்: அமெரிக்க இந்தியர்கள் நூதனம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் வாழும்  இந்திய குடியுரிமை அல்லாத இந்தியர்கள், இந்தியா வருவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியருக்காக அட்டை  வைத்திருப்பவர்களில் ஒரு சில பிரிவினர் மட்டுமே இந்தியா வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் அட்டை, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விசா இன்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அமெரிக்க குடியுரிமை பெற்ற மைனர் சிறுவர்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களின் மைனர் குழந்தைகளையும் அழைத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு அமெரிக்க வாழ் இந்திய பெற்றோர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘நாங்கள் இந்தியா செல்வதற்கு விரும்புகிறோம். எனவே, அமெரிக்க குடியுரிமை பெற்ற எங்களின் மைனர் பிள்ளைகளையும் இந்தியா அழைத்து வருவதற்கு அனுமதி தாருங்கள்,’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா, நியூஜெர்சி, வாஷிங்டன், கனெக்டிகட், நியூயார்க், பெனிசில்வேனியா, அரிசோனா, டெக்சாஸ், ஜார்ஜியா, மேரிலேண்ட், கரோலினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய பெற்றோர்கள், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இது குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்னர். ‘எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்க குடிமக்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் கார்டு கிடையாது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்க குடியுரிமை பெற்று இந்திய விசா வைத்துள்ள எங்களின் மைனர் சிறுவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: