கொரோனா பீதியில் உ.பி. மக்கள்; ஆய்வக ஊழியரை தாக்கி சளி மாதிரியுடன் குரங்குகள் ஓட்டம்: கடித்து தின்று மரத்தில் இருந்து வீசியது

மீரட்: உத்தரப் பிரதேசத்தில் ஆய்வக ஊழியரை தாக்கிய குரங்குகள் அவர் வைத்திருந்த சளி மாதிரிகளை எடுத்து சென்று தின்றதால் கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் இருந்து நேற்று முன்தினம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அந்த வளாகத்தில் சுற்றித்திரிந்த சில குரங்குகள் திடீரென வந்து ஆய்வக ஊழியரை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுதாரிப்பதற்குள் அவர் வைத்திருந்த சளி மாதிரிகளை பறித்து கொண்டு கிடுகிடு என மரத்தின் மீது ஏறியது.

அங்கு அந்த சளிமாதிரியை கடித்து தின்று, மீதமுள்ளவற்றை மரத்தில் இருந்து கீழே வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட 3 பேரிடம் இருந்தும் மீண்டும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. குரங்கு பறித்து வீசிய சளி மாதிரியால் அப்பகுதியில் கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். சளி மாதிரியை பறித்து சென்ற குரங்கு மரத்தில் இருந்து அவற்றை கடித்து வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஊழியரிடம் இருந்து பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவியதற்கான ஆதாரங்களும் உள்ளதால் மீரட் மக்கள் தங்களுக்கும் பரவி விடுமோ என அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: