கொரோனா நிதி திரட்டுவதற்காக மோடி துவக்கிய பிஎம் கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல: ஆர்டிஐ மனுவுக்கு பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி பதில்

புதுடெல்லி: ‘பிரதமர் மோடி தொடங்கிய பிஎம் கேர்ஸ் எனும் நன்கொடை திரட்டும் அமைப்பு, அரசு அமைப்பு அல்ல. எனவே, அது குறித்த தகவல்களை அளிக்க முடியாது,’ என ஆர்டிஐ மனுவுக்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில், பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களுக்காக பிரதமரின் அவசரகால குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (பிஎம் கேர்ஸ்) எனும் நிவாரண நிதியத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக 3 முக்கிய மத்திய அமைச்சர்களும் உள்ளனர்.

பிரதமரே அறிவித்ததால் இதற்கு பல பிரபலங்கள் கோடிக்கணக்கில் நிதியை வாரி வழங்கினர். பல ஆன்லைன் செயல்பாடுகளிலும் பிஎம் கேர்ஸ் நிதி செலுத்துவதற்கான நேரடி வசதிகள் செய்யப்பட்டன. இந்த நன்கொடை நிதியத்துக்கு நாட்டின் பிரபல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள், ராணுவம், மத்திய அரசு ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவர்கள் பல ஆயிரம் கோடி நிதியை வாரி வழங்கினர். குறிப்பாக, இந்த நன்கொடை திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே டாடா நிறுவனம் ₹1,500 கோடி நன்கொடை வழங்கியது.

சில அமைச்சகங்கள் தங்கள் துறையின் ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு ஒருநாள் சம்பளத்தை தரவும் கட்டாயப்படுத்தின. இந்த நிதியம் மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய நன்கொடையை தட்டிப் பறிக்கும் விதத்தில் இருப்பதாக பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சட்ட மாணவர் ஹர்ஷா கந்துகுரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் நிதியத்தின் ஒப்பந்த பத்திரம், அரசு உத்தரவுகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள், ஆகியவற்றை அளிக்க கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில், 30 நாட்களாகியும் பதில் கிடைக்கவில்லை.

இதனால், மேல்முறையீடு செய்ய, பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் 29ம் தேதி அவருக்கு அதிர்ச்சிகரமான பதில் கிடைத்தது. அதில், ‘ஆர்டிஐ சட்டம் 2(எச்)ன்படி, பிஎம் கேர்ஸ் அரசு அமைப்பின் கீழ் வரவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்களை பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்,’ என கூறப்பட்டிருந்தது. இது குறித்து கந்துகுரி கூறுகையில், ‘‘பிஎம் கேர்ஸ் பற்றி அறிய ஆர்வமாக இருந்தேன். நிதியத்தின் பெயர், அமைப்பின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, சின்னத்தின் பயன்பாடு, அரசு பண்புரிமைப் பெயர் போன்று அனைத்தும் இது அரசு அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்பதையே காட்டுகிறது.

எனவே, மீண்டும் மேல்முறையீடு செய்வேன்,” என்றார். பிரதமர் அலுவலகத்தின் இந்த பதில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. ‘பிம் கேர்ஸ்’ என்பது அரசின் கீழ் செயல்படும் ஒரு நிதியமா? அல்லது பாஜ.வின் மூலம் செயல்படுத்தப்படும் அறக்கட்டளையா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதற்கு, மத்திய அரசும் சரியான பதிலை அளிக்கவில்லை. மேலும், வெளிப்படைத் தன்மையை பின்பற்றாமல், ரகசியம் காப்பதால் பல்வேறு தரப்பில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. இதனால், இந்த நன்கொடை திட்டம் நாளுக்கு நாள் சர்ச்சையாக மாறி வருகிறது.

ஆரம்பம் முதலே காங். எதிர்ப்பு

மோடியின் ‘பிஎம் கேர்ஸ்’ நன்கொடை திட்டத்துக்கு காங்கிரஸ் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட ரூ7 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த நிதி கொரோனா பாதிப்புக்காக செலவிடப்பட்டதா? எந்தெந்த இடங்களில் செலவிடப்பட்டது? என்பது போன்ற தகவல்களை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

* பிஎம் கேர்ஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே ரூ6,500 கோடி நிதியை பெற்றது.

* தற்போது வரை சுமார் ரூ10,000 கோடி வரை நிதி கிடைக்கப் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது..

* இதில் பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகளைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களே அதிகளவு நிதி தந்துள்ளன.

* மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடந்த ஏப்.3ம் தேதி ரூ925 கோடி வழங்கியது.

* ஓஎன்ஜிசி, ஐஓசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ1000 கோடிக்கும் அதிகமான நிதி அளித்துள்ளன.

Related Stories: