சென்னை குடிசைப்பகுதி மக்கள் 7 நாள் தனிமை முகாமில் இருந்தால் ரூ1000

* நிதி கொடுத்து கொரோனாவை குறைக்க முயற்சி

* தூய்மைப்பணியாளருக்கு ரூ2,500 மதிப்பூதியம்

சென்னை: சென்னையில் குடிசைப்பகுதியில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி ரூ1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு ரூ2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 150க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நோய் தொற்றை தடுக்க சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுவதுடன், நோய் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் விவரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 100க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர். இதனால் நோய்தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்க வழி வகுக்கும். இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து,

அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும். இவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும்.

Related Stories: