201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக அமல்; குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களை தனிமையில் தங்கவைக்க 15,000 படுக்கை: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் குடிசைப்பகுதியில் உள்ளவர்களை தனிமைப்படுத்த 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. 113 பேர் உயிரிழந்துள்ளனர். 6489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த 89 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக திருவொற்றியூர்-14 பகுதிகளும், மணலி- 9 பகுதிகளும், மாதவரம்- 20. தண்டையார்பேட்டை- 1, ராயபுரம்- 67, திருவிக நகர்- 23, அம்பத்தூர்- 17, தேனாம்பேட்டை- 10, கோடம்பாக்கம்- 5, வளசரவாக்கம்-1, ஆலந்தூர்- 6, அடையாறு- 13, பெருங்குடி- 4, சோழிங்கநல்லூர்- 11 பகுதிகளும் உள்ளது. இந்ததனிமைப்படத்தப்பட்ட பகுதியில் ஊரடங்கை கடுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதைத்தவிர்த்து சென்னையில் குடிசைப்பகுதிகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்த 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ,கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட 8 மண்டலங்களில் மண்டலத்திற்கு  தலா 3000 படுக்கைகள் மற்றும் மீதமுள்ள ஏழு மண்டலங்களில் தலா 1,500 படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மண்டலத்தில் 1000 படுக்கைகள் வீதம் 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: