×

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு; 8வது மாடியிலிருந்து குதித்து பெண் நோயாளி தற்கொலை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்

சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி  அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை  பெறும் கொரோனா நோயாளிகள் அவ்வப்போது தப்பித்து ஓடும் சம்பவங்கள்  அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் பன்நோக்கு அரசு மருத்துவமனைகளில் கழிவறையில் 2 பேர் தூக்கிட்டும், ஒருவர் மயங்கி விழுந்தும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் 40 வயது பெண் ஒருவர் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார். 8 மாடிகளை கொண்ட டவர் 3 கட்டிடத்தில்தான் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இக்கட்டிடத்தின் மொட்டை மாடி வரை ஏறி, அங்கிருந்து குதித்து அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இதை நேரில் பார்த்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின்படி மருத்துவமனை போலீசார் கவச உடைகள் அணிந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு ெசய்த போலீசார், கொரோனா பாதித்த 40 வயது பெண் எதற்காக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார்.  தற்கொலை ெசய்து கொள்வதற்காக அவர் சென்றாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தற்கொலை ெசய்து கொள்ளும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Tags : Rajiv Gandhi Government Hospital Woman ,suicides ,Coroner , Rajiv Gandhi Government ,Hospital, Woman, suicides ,8th floor
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...