விவசாயிகளை அடியோடு அழிக்க அரசுகள் முயற்சிப்பதா?... அப்பாஸ், மதுரை உட்பட 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1990களில் அன்றைய தமிழகத்தின் 16 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று அந்த எண்ணிக்கை 22 லட்சத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத இந்த சட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 89 சதவீத மின்சாரத்தை தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு வழங்கி மீதி இருக்கக்கூடிய 11 சதவீத மின்சாரத்தை இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. 1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய முயற்சித்தார். அதை கண்டித்து திமுக பலமான எதிர்ப்பை வெளிக்காட்ட இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை அவர் கைவிட்டார். ஒரு காலத்தில் இரண்டு மூட்டை நெல் கொடுத்தால் ஒரு பவுன் தங்கம் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று 200 மூட்டை நெல் கொடுத்தாலும் ஒரு பவுன் தங்கம் கிடைக்காது. இன்று தங்கத்தின் விலையோடு விவசாயிகளை ஒப்பிட்டால், விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. விவசாயத்திற்கு பயன்படும் உரத்தின் விலை 250 மடங்கு உயர்ந்துள்ளது. பூச்சி மருந்துகளின் விலையோ 300 மடங்கிலிருந்து 400 மடங்காக அதிகரித்திருக்கிறது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய நெல் மற்றும் உணவு தானியங்களின் விலை அதலபாதாளத்தில் உள்ளது.

நெல் விவசாயிகளுக்கு மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 19 ரூபாய் 20 பைசாவும், மாநில அரசு ஊக்கத்தொகையாக 70 காசுகளும் வழங்குகிறது. இந்த பணத்தை வைத்து விவசாயிகள் என்ன செய்ய முடியும்?  கரும்பு விவசாயிகள் வங்கி கடன் கட்ட முடியாமல் வங்கிகளால் விவசாய நிலங்கள் ஜப்தி செய்யப்படுகிறது. கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி நிலுவைத் தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதிகாரிகளை வைத்து விவசாயிகளுக்கு எதிராக அரசு வழக்குத் தொடுக்கிறது. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் 4 சதவீதத்திலிருந்து தற்சமயம் 10.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதே போல மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான பல சலுகைகளை ரத்து செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்யத் துடிக்கிறார்கள்.

இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பின்னணியை உற்று நோக்கும்போது, இது சிறு குறு விவசாயிகளுடன் ஒட்டுமொத்த விவசாயிகளை அழிக்கும் செயல். ஏனென்றால் இலவச மின்சாரம் கொடுத்து வரும் நிலையிலேயே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இலவச மின்சாரத்தை நிறுத்துவதன் மூலம் அரசே விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயம் செல்லும்போது மலட்டுத்தன்மை உள்ள விவசாய விளை பொருட்களையே பொதுமக்கள் உண்ணும் நிலை ஏற்படும். இதனால் மனித இனத்திற்கே பெரும் அழிவு ஏற்படும். ஆற்றுப்பாசன விவசாயத்திற்கு வரி வசூலிக்காத அரசு, அந்த நீரைச் சேமித்து பம்ப்செட்கள் மூலம் பாசனம் செய்கிறபோது, அதற்கென செலவாகும் மின்சாரத்திற்கு பணம் கேட்பது, எந்தவிதத்தில் நியாயம்? விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பட்சத்தில் விவசாயம் முற்றிலும் நலிந்து போகும். விவசாய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கும்.  கொரோனா நோய் பீதியால் கடந்த 3 மாதமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதாரமின்றி மிகப்பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து என்றால் ஏழைகளின் வாழ்வும் விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்.

Related Stories: