இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் உணவுப் பஞ்சம் ஏற்படும்: செ.நல்லசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்

விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வரை இலவச மின்சாரம் விவசாயத்துக்கு தொடர வேண்டும். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இலவச மின்சாரம், மானியம், கடன், வருமான வரி விலக்கு போன்ற எந்த சலுகையும் எங்களுக்கு வேண்டாம். தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை எடுத்துவிட்டால், உணவு தானிய உற்பத்தி மிகவும் குறையும். தற்போது மாநிலத்தில் மழையளவு குறைந்து விட்டது. அதனால், பெரும்பாலான விவசாயிகள் தங்களிடம் உள்ள ஆழ்துளை கிணறுகளை நம்பி தான் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்கும் சூழ்நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டால், ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களை பெரும்பாலான விவசாயிகளால் இயக்க முடியாத நிலை ஏற்படும். மீட்டர் பொருத்தப்பட்டுவிட்டால் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும். அவ்வளவு கட்டணத்தை செலுத்தி, தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகாது. இதனால் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபடமாட்டார்கள்.  இதனால், தமிழகத்தில் விவசாய பரப்பு குறையும். விவசாயம் நின்று விடும். அப்போது தமிழகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். பஞ்சம் அதிகரிக்கும்.

விவசாயம் பாதியாக குறையும் நிலையில், அதை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூடுதல் தொகை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இத்தகைய உணவு பொருட்கள் விற்பனைக்கு வரும்போது, அவற்றின் விலையும் மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது பொதுமக்கள் அதிக விலைகொடுத்து உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது விவசாயிகளும் வீடுகளுக்கு மின்கட்டணத்தை செலுத்தித்தான் வருகிறார்கள். விவசாய பம்பு செட்டுகளுக்கு மட்டுமே அரசால் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் தான் நுகர்வோருக்கு சற்று குறைந்த விலையில் உணவு, பழம் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகள் கிடைக்கிறது. இதனால் இலவச மின்சாரத்தினுடைய பயனாளிகள் விவசாயிகள் என்று கூறுவது தவறு. இலவச மின்சாரத்தினால் பயனடைபவர்கள் நுகர்வோர்களான பொதுமக்கள்தான்.

எனவே விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  

இதேபோல் மானிய விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மானியம் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டு வாக்கில் இரண்டரை லட்சம் விவசாயிகள் குடும்பம், குடும்பமாக தற்கொலை செய்து கொண்டனர். அப்போது மத்திய அரசு விவசாய கமிஷன் அமைத்தது. பிறகு அந்த கமிஷன் 2006ம் ஆண்டு தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கியது. அந்த அறிக்கை தற்போது வரை கிடப்பிலேயே உள்ளது. எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஒரு குவிண்டால் நெல், பருப்பு, கரும்பு உள்ளிட்டவை அறுவடை செய்து, அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லும் வரை ஆகும் செலவை துல்லியமாக கணக்கிட வேண்டும். இதேபோல் ஒவ்வொரு பயிருக்கும் கணக்கிட வேண்டும். பிறகு சாகுபடி செலவில் பாதியை லாபமாக வைத்து, அந்த லாபத்தை  சாகுபடி செலவோடு சேர்த்து ஒவ்வொரு பட்டத்துக்கும் விலை நிர்ணயம் செய்து விடுங்கள். அதன்பிறகு விவசாயிகளுக்கு இலவசம், மானியம், கடன் எதுவும் வேண்டாம்.

Related Stories: