தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது; பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்...!

சென்னை: தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவை தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. நேற்று இரவுடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்தது. இதற்கிடையில், தேசிய ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக 30ம் தேதி அறிவித்தது. இதில் குறிப்பாக நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பொது பேருந்து போக்குவரத்து இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை செயல்படுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி 7 மற்றும் 8 வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. உள்ள மொத்த இருக்கைகளில், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. அனுமதிக்கப்பட்டவைகளைத் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவை தொடங்கியது. இதன்படி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலத்தில் இருந்து 116 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பகோணத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, மன்னார்குடிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், சீர்காழி, திருவாரூக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேருந்துகளிலும் 32 இருக்கையில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதால் பேருந்துகள் ஏற பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 பணிமனைகளில் இருந்து 220 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 131 நகர பேருந்துகள் மற்றும் 89 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 220 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருப்பூர் மண்டலத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. குன்னத்தூர், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட ஊர்களுக்கு 197 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ரயில் சேவை தொடக்கம்;

கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுத்துறை ஆகிய ஊர்களுக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கோவை இன்டர்சிட்டி ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மோரப்பூர், ஜோலார்போட்டை வழியாக காட்பாடி செல்லும் கோவை-காட்பாடி இன்டர்சிட்டி ரயிலில் 300 பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனைபோல், 800 பயணிகளுடன் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்று சேரும்..மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் மதியம் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

Related Stories: