தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை விவசாயிகளுக்கு கெடுபிடியா?.. ஆனந்த் சீனிவாசன், பொருளாதார நிபுணர்

மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மீட்டர் பொருத்தி, அவர்கள் பயன்படுத்தக்கூடிய மின்சார கட்டணத்துக்கான பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் போடுங்கள் என்று தமிழக அரசை சொல்கிறார்கள். ஏற்கனவே தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் மின்வாரியம் தனது கடனை கட்ட முடியாத நிலையில் உள்ளது. மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளுக்கு கடன் வாங்கி கொள்ளுங்கள் என்றும், ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கண்டிஷன் வைக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் பல்வேறு இழப்புகளை விவசாயிகள் சந்தித்துள்ளனர். தற்போது வெட்டுகிளி தாக்குதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வேறு இருக்கிறார்கள். விவசாயிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்த மாதிரி நேரத்தில் இப்படி அறிவித்தால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தான் செய்வார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசோ, எதிர்க்கிற மாதிரி எதிர்த்து விட்டு பின்னர் மத்திய அரசின் உத்தரவுக்கு தான் கட்டுப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழக அரசு நடப்பதே அவர்களின் தயவால் தான். எனவே விவசாயிகள் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் இப்போது அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கிறார். கடைசி வரை சரண்டர் ஆக மாட்டார் என்பதே எனது கணிப்பு.

ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இப்படி அறிவித்திருந்தால் உடனடியாக நிறைவேற்றி இருப்பார். ஆனால் இப்போது தேர்தல் குறுகிய காலம் இருப்பதால் பண்ண மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் பல்வேறு வேலைகள் இருக்கிறது. அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு இடத்திலும் மீட்டர் போட வேண்டும். எவ்வளவு கரண்ட் எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சிலர் வீடுகளுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் வெளியில் வந்துவிடும். அதனால் மீட்டர் போட்டால் பிராப்ளம். அதனால் வேண்டாம் என்கிறார்கள். மீட்டர் படி கணக்கு கொடுத்தால் சிக்கல். விவசாயிகளுக்கு தான் ஆபத்து. இப்போது யாரிடமும் காசு இல்லை. இந்த சமயத்தில் இதை பண்ணுவது தவறு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கும் மானியம் கொடுக்கவில்லை. ஒருத்தருக்கும் பணம் போடவில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகளை பிரதமர் அள்ளி கொடுக்கிறாரே தவிர ஏழைகளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டு பெரும் முதலாளிகளுக்கு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி வருமான வரி விலக்கு கொடுத்தார். இதுபோன்ற பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளார். 3 மாதத்தில் எந்த வருமானமுமே இல்லாமல் இருக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சமயத்தில் இதை பற்றி பேசுவதே தவறு. எதிர்காலத்தில் இதுபோன்று கொண்டு வருகிறார்கள். வராமல் போகிறார்கள். அதெல்லாம் அந்தந்த காலத்தை பொறுத்தது. ஆனால் இப்போது இதை பற்றி பேசவே கூடாது. இது நியாயமில்ைல. பிரதமரே அரசுத் துறை ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளத்தை கொடுக்கவில்லை. பிஎஸ்என்எல்லில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பவர்களுக்கு கடந்த 4,5 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. குறு, சிறு தொழில்களுக்கு ரூ.5லட்சம் கோடி கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஒன்றும் செய்த மாதிரி தெரியவில்லை. பிரதமரே யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்கிறார். ஆனால் மற்றவங்களை பண்ணுங்க என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். அவர் வீட்டை சுத்தமாக வைத்துவிட்டு, அதன் பின்பு தான் மற்றவங்க வீடு சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Related Stories: