×

கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்

ஊட்டி: ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை தணிக் கவும் விடுமுறையை கொண்டாடவும் ஏராளமான சுற்றலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். குளு குளு சீசன் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, குன்னூர் பழக்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.  ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. அதே போல் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்து குலுங்கின.

ஆனால், இம்முறை கொேரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. இதனால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் மலர்கள் அழுக துவங்கியுள்ளன.பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த டேலியா மலர் அழுகி உதிர்கின்றன.

மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மேரி கோல்டு மலர்களும் அழுக துவங்கியுள்ளன. இதே போல் ரோஜா பூங்காவிலும் பெரும்பாலான ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்து வருகின்றன. ரோஜா மலர்கள் அழுகி உதிர்வதால் பெரும்பாலான செடிகள் மலர்கள் இன்றி காணப்படுகிறது.ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இம்முறை அனைத்து பூங்காக்களிலும் மலர்கள் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் எவருமே மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Tags : gardens ,Ooty , Heavy Rain, Ooty Park, Flowers
× RELATED தாவரவியல் பூங்கா நுழைவு வாயில்...