×

ஊரடங்கில் தளர்வு எதிரொலி; ஏழுமலையானை தரிசனம் செய்ய 8ம்தேதி முதல் பக்தர்கள் அனுமதி?

திருமலை: கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால் சுவாமிக்கு வழக்கம்போல் நித்ய பூஜைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கில் சில தளர்வு காரணமாக வரும் ஜூன் 8ம்தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து குறைந்தளவு பக்தர்களை ஏழுமலையான் கோயிலுக்குள் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறை, லட்டு பிரசாதம் வாங்கும் இடம், அன்ன பிரசாத கூடம், கல்யாண கட்டா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக எல்லை கோடுகள் வரையப்பட்டு உள்ளது. அலிபிரி சோதனை சாவடி அருகே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு அந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தெர்மல் சோதனை செய்து திருமலைக்கு அனுமதிக்கவும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 8ம்தேதி முதல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது, ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் ெவளியாகும் என தெரிகிறது.

Tags : pilgrims , Curfew, Ezumalayanai Darshan, devotees allowed
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்