தபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு

திங்கள்சந்தை: இரணியல் அருகே ஆளுரில் பழமை வாய்ந்த தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்துக்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த தபால் கட்டிடத்தை செடி, கொடிகள் அதிக அளவில் ஆக்ரமித்து இருந்தன. இதனால் தபால் நிலையத்துக்கு வந்து சென்றவர்கள் ஏதோ பாழடைந்த குகைக்குள் சென்று வருவது போல் எண்ண தொடங்கினர். இது தவிர பொது மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வந்தனர். தபால் நிலைய கட்டிடத்தின் வழியாக உயர் அழுத்த மின் கம்பிகளும் செல்கிறது. ஆகவே செடி, கொடிகள் மீது மின் வயர்கள் உரசி அடிக்கடி தபால் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட தொடங்கியது.

இது ஊழியர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. இதை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. நீண்ட நாளாக நீடித்து வந்த இந்த பிரச்னை குறித்த விரிவான செய்தி புகைப்படத்துடன் தமிழ்முரசு நாளிதழில் 14.5.2020 அன்று வெளியானது. இதையடுத்து தபால்துறையின் மாவட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து தபால் நிலைய கட்டிடத்தை ஆக்ரமித்து இருந்த செடி, கொடிகள் அனைத்தையும் வெட்டி அப்புறப்படுத்தினர்.

தற்போது தபால் நிலையம் பழைய முறைப்படி பளிச்சென காண்போரை கவர்ந்திழுக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தமிழ்முரசு நாளிதழுக்கு தபால்துறை ஊழியர்கள், பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: