ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு...முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கல்

சென்னை: மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது. இதனால் சென்னையை தவிர முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வேக்கு தமிழக அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. இந்த கடிதத்தை தென்னக ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்தது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 4 முக்கிய ரெயில் வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கோவை - மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை-காட்பாடி விரைவு ரெயில் ஆகிய ரெயில்கள் நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ளன. மதுரை-விழுப்புரம், நாகர்கோவில்-திருச்சி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினமும் இயக்கப்பட உள்ளன. நேற்று மாலை இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் போக்குவரத்துக்கு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூறியதாவது; அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் e-pass பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ/ மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில்மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து இ-பாஸ் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம். நோய்த்தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர். ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப்பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வர அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: