வனச்சாலைகளை கடந்து தாகம் தீர்க்க அமராவதி அணை நோக்கி செல்லும் காட்டு யானைகள்

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையை நோக்கி தாகம் தணிப்பதற்காக காட்டு யானைகள் கூட்டம் படையெடுத்து வருகின்றன. திருப்பூர்  மாவட்டத்தில் உடுமலை, அமராவதி வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் செடி, கொடி, மரங்கள் காய்ந்து  வருகின்றன. வனப்பகுதியில் உள்ள ஊற்று, அருவி, தடுப்பணை  உள்ளிட்டவையும் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதனால் வனவிலங்குகள் இரைதேடி  இடம் பெயர துவங்கியுள்ளன. குறிப்பாக யானைக்கூட்டங்கள் இரை மற்றும் தண்ணீர்  தேடி உடுமலை, அமராவதி வனச்சரகத்தை விட்டு அமராவதி அணை  நோக்கி வனச்சாலைகளை கடந்து செல்கின்றன. உடுமலை-மூணார் மலை வழிப்பாதையின் ஓரமாக  கூட்டம், கூட்டமாக மாலை நேரத்தில் நிற்கின்ற யானைக்கூட்டம் பின்னர்  மெதுவாக குட்டிகளை அழைத்துக் கொண்டு அமராவதி அணைக்குள் இறங்குகின்றன.

அணையின் கரையோர பகுதிகளில் நீரை பருகி மகிழ்கின்றன. ஒரு சில யானைக்கூட்டம் அணைக்குள் நீராடுவதோடு,  அணையின் கரையில் உள்ள சேற்றை உடம்பில் பூசியும் மகிழ்கின்றன. ஊரடங்கு  காரணமாக உடுமலை-மூணார் சாலையில் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்லாததாலும், மனித நடமாட்டம்  இல்லாததாலும் யானைக்கூட்டம் பகல், இரவு நேரங்களில் சாலையில் உலா  வருகின்றன.

வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதிகளுக்கு, சரக்கு ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில்  செல்பவர்கள் சாலையோரம் நிற்கின்ற யானைகளுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எந்த  ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது. மேலும் செல்பி எடுப்பதாக கூறி யானைகளின்  அருகில் பைக்கை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை  விடுத்து வருகின்றனர்.

Related Stories: