கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில ஆர்டர் கிடைக்காததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்

ஈரோடு: வடமாநில துணி ஆர்டர்கள் கிடைக்காததால் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம்  வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, சோலார், மாணிக்கம்பாளையம்,  சூளை உள்ளிட்ட பகுதிகளில் 25,000 தறிகள் உள்ளன. தற்போது கொரோனா ஊரடங்கு  காரணமாக 1,000 விசைத்தறிக்கும் குறைவான தறிகளே இயங்குகிறது. இந்நிலையில்  வடமாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் அங்குள்ள ஜவுளி சார்ந்த  தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், புதிய ஆர்டர்கள் எதுவும்  வரவில்லை. இதனால், ஈரோடு விசைத்தறியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.  இதே நிலை நீடித்தால்  தொடர்ந்து விசைத்தறிகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என  விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு விசைத்தறி  உரிமையாளர்கள் சங்க செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:

 மகாராஷ்டிரா,  குஜராத், டெல்லி போன்ற பகுதிகளில் ஜவுளி சார்ந்த கடைகள், சாய, சலவை,  பிரிண்டிங் ஆலைகள் கொரோனா ஊரடங்கால் இயக்கப்படாமல் உள்ளது. இம்மூன்று  மாநிலங்களிலும் காடா துணியாகவும், இங்கு வேலைப்பாடு செய்யப்பட்ட  துணியாகவும் வாங்குவார்கள். ஆனால் இதுவரை புதிதாக அங்கிருந்து ஆர்டர்  ஏதும் வரவில்லை. பழைய ஆர்டர்களும் ஏற்கனவே ரத்தாகிவிட்டது. வேறு  வழியில்லாமல் தமிழக அரசின் இலவச சீருடை ஆர்டர்தான் தயாரிக்கப்படுகிறது. வடமாநிலங்களில் இருந்து புதிய ஆர்டர்கள் வந்தால் மட்டுமே  விசைத்தறிகள் முழுமையாக இயக்க முடியும். இதே நிலை நீடித்தால் உற்பத்தியை  நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கந்தவேல் கூறினார்.

Related Stories: