கொரோனா ஊரடங்கின் போது ஊட்டி உழவர் சந்தை பொலிவு

ஊட்டி : கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக ஊட்டியில் உள்ள உழவர் சந்தை பொது இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து உழவர் சந்தையை பொலிவுபடுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. சமூக பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை போன்றவைகள் குறுகலாகவும், போதிய இடம் இல்லாமல் இருந்த நிலையில், மக்கள் நெருக்கத்துடன் காணப்பட்டனர்.இதனால், இவைகள் பொது இடத்திற்கு மாற்ற அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்த உழவர் சந்தை ஏடிசி., பகுதிகளில் உள்ள சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், அரசு மேலும் தளர்வு அளித்தால், இந்த கடைகள் அனைத்தும் மீண்டும் உழவர் சந்தைக்கே செல்ல வாய்ப்புள்ளது. கடந்த இரு மாதங்களாக உழவர் சந்தை மூடப்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு வியாபாரம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிைணந்து கடைகளை சுத்தம் செய்தும், மராமத்து பணிகள் செய்தும், வர்ணம் பூசும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இதனால், தற்போது ஊட்டி உழவர் சந்தை பளிச் என காட்சியளிக்கிறது. அங்கு கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தவுடன், புதுப் பொலிவுடன் காணப்படும் இந்த கடைகளின் திறப்பு விழாவிற்கு கலெக்டரை அழைத்து சிறப்பிக்கவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: