தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது; நாளை மறுநாள் புயலாக உருவாகும்...சென்னை வானிலை மையம் தகவல்...!

சென்னை: வங்கக் கடலில் உருவான அம்பன் சூப்பர் சூறாவளி புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கடந்த 20-ம் தேதி மாலை கரையை கடந்தது. மேற்கு வங்கம், ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 165 கிமீ வரை வீசிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் தரைமட்டமாகின. இந்த புயலால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால், இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த 5 லட்சம் பேரும், ஒடிசாவில் கடலோர பகுதிகளை சேர்ந்த 2 லட்சம் பேரும் தற்காலிக முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

 அம்பன் புயல் மீட்பு பணியில், இரு மாநிலங்களிலும் 41 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாக உருவாகும் என்றும் கூறியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத்தை நோக்கி நகரும் என்றும் ஜூன் 3-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைபோல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: