போடி அருகே அதிமுகவினர் தலையீட்டால் கால்வாய் தூர்வாரும் பணி திடீர் நிறுத்தம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

போடி: போடி அருகே, அதிமுகவினர் தலையீட்டர் கண்மாய், கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயை தூர்வாருவதற்காக, கடந்த 20ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டனர். மீனாட்சியம்மன் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள், விவசாயிகள் நேரடி பார்வையில் கடந்த சில நாட்களாக கண்மாயில் மறுகால் பாயும் இடத்திலிருந்து விசுவாசபுரம் செல்லும் கால்வாயை தூர்வாரி, இருபுறமும் கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. இந்நிலையில், திடீரென தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதையறிந்த 400க்கும் மேற்பட்டவர்கள் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திடலில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் தலைமையில் தூர்வாரும் பணி தொடங்கியது. இதன்படி இரண்டு நாட்களாக பணி செய்து வந்தோம். தற்போது அதிமுகவினர் தலையீட்டால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் குளம் பாசன நீர் விவசாயிகள் ஆயக்கட்டுதாரர்கள் தரப்பில்தான் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வோம். யாருக்காகவும் விட்டு தர மாட்டோம். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அதிமுகவினர் வந்து தூர்வாரும் பணியை நிறுத்தச் சொன்னதால், தூர்வாரும் பணியிலிருந்து ஜேசிபியை, அதன் உரிமையாளர் எடுத்துச் சென்றுவிட்டார். தூர்வாரும் பணியை விவசாயிகள், ஆயக்கட்டுதாரார்கள், அதிகாரிகள் தலைமையில்தான் நடக்க வேண்டும். அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது’ என்றார்.

Related Stories: