×

மகசூல் குறைவால் இளநீர் விலை அதிகரிப்பு: ரூ.30க்கு கொள்முதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் மகசூல் குறைவால், இளநீர் விலை அதிகரித்துள்ளது. தோட்டங்களில் ரூ.30க்கு கொள்முதல் செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, இன்னும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.    கடந்த ஜனவரி மாதம் வரை தோட்டங்களில் இளநீர் ஒன்று ரூ.19 முதல் அதிகபட்சமாக ரூ.21க்கே கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பின் கோடை வெயிலின் தாக்கத்தால் இளநீருக்கு கிராக்கி அதிகரித்தது. இருப்பினும், மார்ச் மாதம் 25ம் தேதி  முதல் ஊரடங்கால் பல வாரமாக இளநீர் அறுவடை குறைந்ததுடன், விற்பனை மிகவும் மந்தமானதால் இளநீர் விலை உயராமல் இருந்தது.

 ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள  தென்னையில் இளநீர் மகசூல் குறைந்தது.  கடந்த  ஆண்டு மே மாதம் வரை தினமும் சுமார் 1.50லட்சம் இளநீர் வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் இந்த முறை மகசூல் குறைந்ததால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
 இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீரின் விலை அதிகபட்சமாக ரூ.21ஆக இருந்தது. ஆனால் தற்போது தோட்டங்களில் ஒரு இளநீர் ரூ.30வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கோவை திருப்பூர், ஈரோடு பகுதியில் சில்லரை விலைக்கு ஒரு இளநீர் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டாலும், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் ஒரு இளநீர் ரூ.45வரை விற்பனை செய்யப்படுவதாக, இளநீர் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Increase ,yield , young water,decrease, yield, Purchase for Rs
× RELATED யானை தாக்கி விவசாயி பலி