விருதுநகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்:  விருதுநகர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளின் குடிநீர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணைகள்  கட்டி நீரை தேக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில்  பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு  வருகிறது. கண்மாய் நிறைந்து வெளியேறும் தண்ணீரில் இருந்து கவுசிகா ஆறு  வழியாக குல்லூர்சந்தை அணைக்கும் அங்கிருந்து கோல்வார்பட்டி அணைக்கு  செல்கிறது. இந்நிலையில் விருதுநகர் வழி செல்லும் கவுசிகா ஆற்றில்  விருதுநகர் நகராட்சி குடியிருப்புகள், சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு,  ரோசல்பட்டி ஊராட்சி குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்கிறது. இதனால்  குல்லூர்சந்தை அணை சாக்கடையாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் 14  ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் பாதாளச்சாக்கடை திட்ட பணிகள் துவங்கி இன்று  வரை முழுமை பெறாத காரணத்தால் விருதுநகர் நகராட்சி கழிவுநீர் கவுசிகாவில்  கலக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் கெளாசிகாவில் கழிவுநீர் கலப்பதை தடுக்க  வேண்டும். விருதுநகர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளுக்கு  தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வந்தாலும், குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து  ஆடுகிறது. நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 10 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, கவுசிகா ஆற்றை தூர்வாரி  தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும்  தடுப்பணை தண்ணீர் மூலம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் தண்ணீர் பிரச்னைக்கு  தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: