தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சில் மட்டுமே விசாரணை: உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.  நான்காம்  கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. மதுரைக் கிளையை பொறுத்தவரை, வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து 5 வழக்கறிஞர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்ற விசாரணை மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம். அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க அனுமதியளிக்கப்படுகிறது. தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்கலாம். 5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது. நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories: