×

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் தவிப்பு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதில், திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் 2000 முதல் 2200 டன் வரையிலான குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் மலைபோல் தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுற்றுப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, மழைகாலத்தில் குப்பையுடன் தண்ணீர் சேர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது.  மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப் பகுதி வீடுகளுக்கு படையெடுப்பதால், மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பையால் நிலத்தடி நீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. குறிப்பாக, இங்குள்ள குப்பையில் இருந்து பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை எடுப்பவர்கள் அடிக்கடி குப்பையை தீவைத்து எரிப்பதால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக மாறி பொதுமக்கள் மூச்சுத்திணறல், மற்றும் கண் எரிச்சலில் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த மாதத்தில் மட்டும் 4 முறைக்கு மேல் இந்த கிடங்கில் குப்பை தீவைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பிரச்னைகளால் இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.  
இந்நிலையில், நேற்று மதியம் இந்த குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து கொருக்குப்பேட்டை மற்றும் சத்தியமூர்த்தி நகரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீவிபத்து காரணமாக சுற்றியுள்ள கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி ஆகிய பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து
தண்டையார்பேட்டை ஆதிதிராவிடர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் நேற்று மாலை மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த மரம் மற்றும் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து ராயபுரம், தண்டையார்பேட்டை, உயர் நீதிமன்றம் ஆகிய தீயணைப்புப நிலையங்களிலிருந்து 3 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

Tags : garbage warehouse ,Kodungaiyur ,suffocation , Kodungaiyur, garbage ware fire, eye irritation, suffocation
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...