×

கொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி நிலையில் காகித ஆலைகள்: 2 மாதங்களில் 10 கோடி இழப்பு

சத்தியமங்கலம்:  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காகித ஆலைகள் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்று வட்டாரப் பகுதியில் 10 காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள காகித ஆலைகளில் நியூஸ் பிரிண்ட், புத்தகங்கள் அச்சடிக்க தேவையான காகிதம், டியூப்க்ஸ்போர்டு மற்றும் கிராஃப்ட் பேப்பர் உள்ளிட்ட பல்வேறு வகையான காகிதங்கள் மற்றும் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் காகிதங்கள் பல்வேறு செய்தித்தாள் நிறுவனங்களுக்கும், சிவகாசியில் உள்ள காலண்டர், புத்தகம் அச்சிடும் அச்சகங்களுக்கும், வெளி மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதமாக ஆலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளாலும் மூலப்பொருட்கள் கிடைக்காமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கவில்லை.   இதுகுறித்து, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் காகித ஆலை நிர்வாகி ஒருவர் கூறியதாவது: .

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காகித ஆலைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. காகித ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களான பழைய காகிதங்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படும் அளவிற்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்பட்ட பேப்பர் சுமார் 500 டன் என மொத்தம் இப்பகுதியில் மட்டும் 5,000 டன் பேப்பர்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. அரசு 50 சதவீத பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது பள்ளிகளுக்கான புத்தகங்கள் அச்சடிப்பதற்கு தேவையான காகிதங்களை அச்சகங்கள் ஆர்டர் எடுக்கவில்லை.  

இதன்காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள காகித ஆலை பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஆலையில் உள்ள இயந்திரங்கள் பராமரிப்பு என மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட செலவினம் கட்டாயமாக செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இப்பகுதிகளில் உள்ள காகித ஆலைகள் சுமார் ரூ.10 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளன. வங்கி கடன் பெற்று நடத்தப்படும் காகித ஆலைகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : crisis ,Corona , Corona, curfew, paper mills, loss of 10 crores
× RELATED கொரோனா நோய் பரவல் நெருக்கடியில்...