×

பரிசோதனையின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 1,400 படுக்கை வசதி கொண்ட நான்கு பிளாக்குகள் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 10 மையங்களில் பரிசோதனையுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைத்துள்ளோம்.  

புளியந்தோப்பு பகுதியில் மட்டும் 1400 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.அறிகுறி இல்லாமல், குறைந்த பாதிப்புடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இந்த  புளியந்தோப்பு மையத்தில்  அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று உள்ளவர்கள் வீடுகளில் இருப்பது போலவே உணர வேண்டும் என்பதற்காக அனைத்து வசதிகளும் இந்த சிறப்பு வார்டில் அமைக்கப்பட்டுள்ளது.

யாருக்கு சிறப்பு மையத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் சோதனைக்கு பின்னரே முடிவெடுப்பார்கள். சமூக பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க தான் அரசு பாடுபட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணத்தை குறைப்பது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 1,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பரிசோதனை அதிகரிப்பதால் தான் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது. எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். அதிகரிக்கும் நோய் தொற்றை தடுக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார். சமூக பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க தான் அரசு பாடுபட்டு வருகிறது

Tags : Chennai ,Health minister , Minister for Examinations, Coronavirus, Health
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...