×

கோயில்களில் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு  காரண மாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் கோயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கோயில்களுக்கு ஏற்றார்போல் ஒரு நாளைக்கு 150 பேர் முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான்  கோயில் போன்று குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். தேசிய தகவல் மையம் மூலம் அறநிலையத்துறை இணையதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று பிரித்து முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ₹50 முதல் ₹500 வரை பெறப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிக் மூலம் ஆன்லைன் இலவச கட்டண தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 1ம் தேதி முதல் கோயில்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Tags : temples ,Darshan , Temples, Darshan, Online Booking
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...