எம்டிசி ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை: எம்டிசியில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பிய சுற்றறிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3,584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1,775 பேருந்துகளின் எப்சி ஜூன் 2020-க்குள்ளாக முடிவடையவுள்ளது.

எனவே, மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து பிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால், எம்டிசியில் எப்சி பிரிவு மற்றும் ஆர்சி பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் 2 நாளுக்கு ஒரு முறை (50 சதவீதம் அடிப்படையில்) உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் உள்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும்.  மேலும், பணியாளர்களுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: