போக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து கழகங்களை கண்டித்து இன்று பணிமனைகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று இணையவழி மூலமாக நடைபெற்றது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு அதனடிப்படையில் சென்ற மாதம் ஊதியம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

மே மாதம் ஊதியம் வழங்கும் பொழுது சென்ற வருட சராசரி அடிப்படையில் வருகைப் பதிவேடு வழங்குவது மீதி நாட்களை சொந்த விடுப்பில் கழிப்பது விடுப்பு இல்லாவிட்டால் சம்பளம் இல்லா விடுப்பாக பாவித்து சம்பளத்தை கொடுக்காமல் இருப்பது என்ற அடிப்படையில் கழக நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவு செய்து அதன் அடிப்படையில் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கழக நிர்வாக இயக்குனர்களிடம் தொழிற்சங்க தலைவர்கள் பேசிய போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி உண்மைகளை மறைத்து வருகின்றனர். நிர்வாகங்களின் இதுபோன்ற தவறான நடவடிக்கையைக் கண்டித்து, முழுமையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் நடவடிக்கை மேற்கொள்வது என அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெக்னிக்கல் மற்றும் அலுவலக ஊழியர்களைப் பணிக்கு வரும்படி நிர்வாகங்கள் கூறியுள்ளன. அரசு அறிவித்துள்ள எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல் வழக்கமான முறையிலேயே நிர்வாகங்களின் செயல்பாடு உள்ளது. பல இடங்களில் டெக்னிக்கல் ஊழியர்களை முறையற்ற முறையில் பழி வாங்கும் நடைமுறைகளையும் துவக்கியுள்ளனர்.

 நிர்வாகங்களின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மே மாதத்திற்கு எவ்வித பிடித்தமும் இன்றி அரசு அறிவித்த அடிப்படையில் முழுமையாக ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், 31.5.2020ம் தேதி (இன்று) அனைத்து பணிமனைகளிலும் சீருடையுடன் சென்று பிரச்னை தீரும் வரை பணிமனைகள் உள்ளிருந்து போராடுவது என அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து தோழர்களும் பணிக்குச் செல்லும் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பணிமனைகளில் சென்று போராட்டத்தை துவக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: