×

பல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி

சென்னை: இந்திய விளையாட்டு வீரர்களை  பாகிஸ்தானில் எப்போதும் மரியாதையுடன் நடத்துவார்கள். குறிப்பாக, மறைந்த ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியரை அங்கு அனைவரும் பாராட்டிக் கொண்டாடுவார்கள் என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான  போட்டி என்றாலே போட்டிக்கு முன்பு எராளமான எதிர்பார்ப்புடன், போட்டியின்போது அனல் பறக்கும்.  விளையாட்டு துறையிலும் பரம விரோதிகளாக 2 நாடுகளும் களம் காண்பது வாடிக்கை. ஆனால் இந்த 2 நாடுகளுக்கு இடையே தெரியாத இன்னொரு ஆச்சர்ய முகமும் இருக்கிறது. இந்திய விளையாட்டு வீரர்கள் மீது  பாகிஸ்தானியர்கள் காட்டும் அன்பும் மரியாதையும்தான் அது.   

அதற்கு  இன்னொரு  ஆதாரமாகி இருக்கிறது இந்திய ஹாக்கி உலகின் ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியர் மரணம். அவரது மறைவுக்கு பாகிஸ்தானில் அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அதிலும் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், ‘பறக்கும் குதிரை’என்று ரசிகர்களால் அழைக்கப்படும், சமீயுல்லாவின் உருக்கமான இரங்கல் செய்தி என்றும் நினைவில் நிற்கும். அதுமட்டுமல்ல பாக். ஊடகங்களிலும் பல்பீர் சிங் வாழ்க்கை, சாதனைகள் குறித்து சிறப்பு செய்தி தொகுப்புகள் வெளியிடப்பட்டன. ஏறக்குறைய இந்தியா அளவுக்கு பாகிஸ்தானிலும் அவரது மறைவு  துக்க நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டது.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம் அவர் உயிரோடு இருக்கும்போதே  1989ல் அங்கு பாராட்டு விழா நடத்தி இருக்கிறார்கள்.  அப்போது அவருக்கு மட்டுமல்ல  இந்திய வீரர்கள்  மேலும் 4 பேருக்கு  பாராட்டு விழா நடத்தி  கவுரவித்தனர். அந்த 5 பேரில் ஒருவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும்,  ரஷ்ய ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தந்த அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன். அவருடன் பல்பீர் சிங், கொரோனா  உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதில் இருந்து: பல்பீர் சிங் ஆகிய விளையாட்டு உலகின் சகாப்தம் என்றால் மிகையாகாது.   நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு  ஹாக்கி உலகின் நாயகன்  தயான்சந்த் என்றால், சுதந்திரத்திற்குப் பிந்தைய ஹீரோ பல்பீர் தான்.  

நான் உட்பட பல முன்னணி வீரர்கள் பலருக்கும்  அவர் தான் குரு.  அவரால் அடையாளம் காணப்பட்ட வீரர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கு உண்டு. ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. அந்த விழாவுக்கு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வந்தார்.  ஆனால்  அவர் மேடைக்கு செல்லும்போது மட்டும் சக்கர நாற்காலியை விட்டு இறங்கினார். அந்த வயதிலும்  பழைய கம்பீரத்துடன் மேடை ஏறி உட்கார்ந்தார். அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்துப் பேசியது. அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும்  இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் மறைவுக்கு  அவர்கள் இரங்கல் தெரிவித்த விதமே அதற்கு சாட்சி.

இந்திய விளையாட்டு வீரர்களை, பாகிஸ்தானியர்கள் மிகவும் மதிப்பார்கள்.  பெஷாவரில் 1989ம் ஆண்டு  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்தது. அந்த போட்டிக்கு முன்பாக எங்களுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர்.  அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக அமிர்தசரஸில் இருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் சென்றோம். வாகா எல்லையில் பாகிஸ்தான் சார்பில் எங்களுக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பளித்தனர். அதற்குப் பிறகும் சரி அதற்கு முன்பும் சரி இப்படி இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் கவுரவிக்கப்படவில்லை.

முதல் முறையாக... விளையாட்டும், அரசியலும் வேறு வேறு துறைகள். இரண்டு நாடுகளுக்கும் இடையில் போட்டிகள் நடந்தால்  விளையாட்டு வளரும்.   அதை உணர்ந்துதான் ஹாக்கி சங்கத்தின் தலைவராக இருந்த எம்.ஏ.எம். ராமசாமி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 1978ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்தியாவில் மும்பை, பெங்களூர்,  பாகிஸ்தானில் லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் அந்த தொடர் நடந்தது. அதேபோல் இப்போதும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டிகள் உட்பட எல்லா விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இலங்கையுடன் பிரச்சினை இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது போல் பாகிஸ்தானுடன் தொடர்ந்து விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் விளையாட்டுக்கு நல்லது.

பாதுகாப்பு  முக்கியம்: கொரோனா தொற்று பீதி,  விளையாட்டுப்போட்டிகள் நிறுத்தப்பட்டது ஆகியவை  எதிர்பாராத நிகழ்வுகள். மீண்டும் எப்போது  இயல்பு நிலை திரும்பும், மீண்டும் எப்போது போட்டிகளை தொடங்குவது என்று காத்திருக்கும் சூழல். பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்காக  வரையரை செய்யப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் போட்டிகளை நடத்துவது மிகவும் சிரமம். பந்துகளை கடத்தும்போதும்,  தடுத்து விளையாடும்போதும் வீரர்களுக்கிடையே உடல் தொடர்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதேபோல் கையுறை அணிந்து விளையாடுவதும் சிரமமான விஷயம்.  எனவே போட்டிகளை நடத்த அவசரம் காட்டக்கூடாது. போட்டியை விட வீரர்கள் பாதுகாப்பு முக்கியமானது.

பயிற்சிக்கு ஓகே: அதனால்தான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இந்திய ஆண்கள்,  பெண்கள் ஹாக்கி அணிகள் பெங்களூரு சாய் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த இரண்டரை மாதங்களாக  எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள். மேலும் கடந்த 3 நாட்களாக அவர்கள் சிறு சிறு குழுக்களாக, பல மணி நேர இடைவெளியில், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சியையும் தொடங்கி உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் பயிற்சிக்கு மட்டுமே வாய்ப்பு. போட்டிகள் நடத்த அவசரம் காட்டுவது சரியாக இருக்காது.

ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு: இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஆண்கள், பெண்கள் என இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன .  இரண்டும் திறமையான ஆட்டக்காரர்களை கொண்ட நல்ல அணிகள்.  இந்த முறை கட்டாயம் பதக்கம் வெல்லும் அணியாக இந்தியா உள்ளது. தங்கம் வெல்லும் என்று கணிப்புகளை சொல்ல முடியாது.  ஏற்கனவே பல ஒலிம்பிக் போட்டிகளின்போது சொன்ன கணிப்புகள் பொய்யாக போய் விட்டன.  அதே நேரத்தில்  இந்த 2  அணிகளும் திறமையானவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

சென்னை ஹாக்கி: மார்ச் மாதம் இடை நிறுத்தப்பட்ட சென்னை டிவிஷன் ஹாக்கி லீக் போட்டியில் இன்னும் 20 போட்டிகள் நடத்த வேண்டியுள்ளது. அந்த போட்டிகளும் அவசரம் காட்டாமல் யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் தான்  நடத்தப்படும்.

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு: இந்திய அணியில் தமிழக வீரர்கள் வாய்ப்பை பெறுவது அரிதாக உள்ளது என்பது உண்மைதான். அதை மாற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளோம்.  அதனால் தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறும் காலம் மீண்டும் வரும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்.



Tags : Pakistan ,Balbir Singh Sr. , Balbir Singh Sr Pakistan, Baskaran
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி