பல கோடி முதலீட்டில் பாடுபட்டு உருவான நிறுவனங்கள் பொதுத்துறை கூண்டோடு மூட்டை கட்டி ஸ்வாகா

* பாதுகாப்பு உட்பட தனியாருக்கு தாரைவார்க்கும் கொடுமை

* நிர்வகிக்க வழியிருந்தும் கவலையின்றி கைகழுவும் அரசு

* காலம் காலமாக உழைத்த ஊழியர்கள், மக்களுக்கு பாதிப்பு

நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து கொண்டிருக்கிறது. இனி, எப்போது இதிலிருந்து மீளும் என்பதற்கு திட்டவட்டமான பதில் எதுவுமே இல்லை. பொருளாதார வீழ்ச்சி பற்றி கணித்த நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. முன்னதாக, உலக அளவில் இந்தியா மட்டுமே ஓரளவுக்காவது பொருளாதார வளர்ச்சியை பெறும் என்று கணிப்புகள் வெளியாகின. ஆனால், கொரானா பரவல் மற்றும் ஊரடங்குக்கு பிறகு தங்கள் முடிவை நிறுவனங்கள் மாற்றிக்கொண்டன. அந்த அளவுக்கு, இந்திய பொருளாதாரம் கந்தல் துணியை போல ஆகிவிட்டது.  இதில் இருந்து மீள ₹20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். அதன்பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5 நாட்களாக தொடர்ந்து சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஓரிரு நேரடி சலுகைகளை தவிர, எல்லாமே கடன் வழங்கும் திட்டங்கள்தான்.

ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள தொழில்துறைக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. முக்கிய துறைகள் சாராத பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்  மயமாக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில்,  தனியார் துறையினரும் அனுமதிக்கப்படுவார்கள். முக்கியத்துவம் வாய்ந்த  துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று முதல் 4 வரை இருக்கும்.  மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. முழுக்க முழுக்க தனியார் மயமாக்கப்பட்ட இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முனைந்துள்ளதையே இது காட்டுகிறது என தொழிலாளர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

 நாட்டின்  வளர்ச்சிக்கும், வளர்ச்சித் திட்டங்களை  முன்னெடுத்துச் செல்வதற்கும்  பொருளாதார ரீதியாக துணை நிற்பவை பொதுத்துறை  நிறுவனங்கள்தான். எல்ஐசி போன்ற  பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நாட்டின்  பல்வேறு வளர்ச்சித்  திட்டங்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் வேலைவாய்ப்பு, சமூக நலன், உள்ளிட்ட   அம்சங்களுக்காக பொதுத்துறை அவசியம் என உணரப்பட்டது. நாட்டின் உள்   கட்டமைப்பு வளர்ச்சி அடைய தொலைத் தொடர்புத் துறை, கனரக தொழில் துறை,   போக்குவரத்து துறை, ரயில்வே  போன்ற துறைகளின் தேவைக்காக பொதுத்துறை   நிறுவனங்கள் துவங்கப்பட்டன.  எண்ணெய், உருக்கு ஆகிய அடிப்படைத் தொழில்களில்  பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க இந்தியா சோவியத்  யூனியனை நாடியது.

இதன்  மூலம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள்  கிடைத்ததால் பிலாய்,  விசாகப்பட்டினம் உருக்காலைகள் அமைக்கப்பட்டன.  தொடர்ந்து பிரிட்டன்  உதவியுடன் துர்காபூர், மேற்கு ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா ஆலைகள்  உருவாக்கப்பட்டன. அப்போது வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில்  தனியாரின் ஆதிக்கம் இருந்தது.  பின்னர், மக்கள் பணத்தை பாதுகாக்க  வங்கி, காப்பீட்டுத் துறைகளிலும்  பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.  1956ல் ₹5 கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இன்றைய  சொத்து  மதிப்பு   மட்டும் ₹31 லட்சம் கோடிக்கும் அதிகம். ஆயுள் காப்பீட்டு  வணிகத்தை  தனியாருக்கு திறந்து விட்ட போதிலும் கடந்த 20 ஆண்டுகளில் கடுமையான  போட்டிச்  சூழலை எல்ஐசி சந்தித்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டிற்காக 25  சதவீதத்திற்கும் அதிகமான நிதியை அளிக்கும்  பெருமை உடையது இந்த நிறுவனம்.

 இருப்பினும் பட்ஜெட்டில் எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுபோல், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது.  விருப்ப ஓய்வு திட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்டட்டுள்ளனர். இதில் பல சேவைகளில் தனியார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ரயில்வே தனியாருக்கு திறந்து விடப்பட்ட நிலையில், ரயில்வே  துறையில் பணியாற்றி வந்த  17 லட்சம் பேரில் 4 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. தனியார் மய முயற்சிகளால் இன்று 13 லட்சம் பேர்  மட்டுமே பணியாற்றுகின்றனர். அடுத்த கட்டமாக பாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட 8 முக்கிய துறையில் தனியார் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகமயமாக்கல் என்று இந்தியாவில் அடியெடுத்து வைத்ததோ அன்றே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளும் தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் ஆயிரம் கோடிகளில் இருந்த விற்பனை தற்போது  பல லட்சம் கோடிகளை தாண்டி விட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். தனியார் மயமானால் இவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ தெரியவில்லை. மக்களுக்கும் இது நேரடி பாதிப்பு ஏற்படுத்தும்.  இப்படிபட்ட சூழ்நிலையில், பெரும்பான்மை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டி வரும்

பொதுத்துறை நிறுவனங்கள் பல லட்சம் பேருக்கு வாழ்வளிப்பது மட்டுமின்றி, லாப நோக்கம் இன்றி மக்கள் சேவையாற்ற உருவாக்கப்பட்டவை. இவற்றின் சொத்துக்கள் நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. உதாரணமாக, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தனக்கு உள்ள 52.98 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு, மும்பை (மகாராஷ்டிரா), கொச்சி (கேரளா), பீனா (மத்திய பிரதேசம்), நுமாலிகர் (அசாம்) என 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றின் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 38.3 மில்லியன் டன். அதோடு இந்த நிறுவனத்துக்கு 15,177 பெட்ரோல் நிலையங்கள், 6,011 காஸ் சிலிண்டர் மையங்கள், 51 காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் உள்ளன.

பெட்ரோலிய சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 21 சதவீதம். இதுபோன்ற ஒரு நிறுவனத்தை மீண்டும் உருவாக்க முடியாது. இதன்படி கணக்கிட்டால் வெளிச்சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி. ஆனால், அரசு பங்கு மதிப்பு 36,159 கோடிதான் என்பதால், 10 முதல் 12 மடங்கு அதிகமாக விற்றால் கூட 4.5 லட்சம் கோடிக்காவது விற்க வேண்டும். தற்ேபாதுள்ள சூழ்நிலையில், இவ்வளவு பெரிய முதலீடுக்கு எந்த நிறுவனமும் தயாராக இருக்காது. அதனால், அரசு பங்கின் மதிப்பில் ஓரிரு மடங்கு மட்டும் அதிகம் வைத்து அடிமாட்டு விலைக்குதான் விற்க வேண்டிய நிலை வரும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும்.

‘மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும்’

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:  மத்திய அரசு தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்க கூடிய நிலக்கரி எடுப்பு, மீத்தேன் எடுப்பு ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி எடுப்பு பணிகள் இனி தனியாருக்கு தாரைவார்க்க படுகிறது. நிலக்கரி எடுப்பதற்கு முன் நிலக்கரி பாறை இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை பிரித்தெடுக்கும் அனுமதியும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய பெரு நிறுவனங்களுக்கும் அளிக்கப்படுகிறது.  இது ஏற்க முடியாதது.   சுற்றுச்சூழல் மாசுபட்டு குறுகிய காலத்திலேயே அப்பகுதி மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறும். மத்திய அரசின் அறிவிப்பின்படி, 50 நிலக்கரித் தொகுதிகள் உடனடியாக ஏலத்தில் விடப்பட்டு நிலக்கரி எடுக்கப்பட இருக்கின்றன.

ஒரு நிறுவனம் எடுக்கக்கூடிய சுரங்க உரிமத்தை பிற நிறுவனங்களுக்கு குத்தகை மாற்றலாம் என்றும் அனுமதிக்கப்படுகிறது. முதல் கட்டத்திலேயே, 500 இடங்களில் சுரங்கங்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பில் வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களை அப்புறப்படுத்தி, அவர்களை அரசு எங்கு குடியேற்றுவதாக இருக்கிறது.?   தமிழகத்தை பொருத்தவரை காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டையின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் மக்களை அணிதிரட்டி களத்தில் நிறுத்துவோம் என்றார்.

Related Stories: