ஊரடங்கு அறிவித்த நாள் முதல் யாருக்கும் அனுமதியில்லை புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி? : பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஊரடங்கு அறிவித்த நாள் முதல் புழல் சிறைக்குள் எந்த புதிய கைதிகளும் அனுமதிக்கப்படாத நிலையில், 30 கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானது எப்படி என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை புழல்  மத்திய தண்டனை சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். 70க்கும் மேற்பட்ட சிறை அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்று மாதவரம் மண்டலம் சுகாதாரத்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு சிறைக்குள் சென்று 63 சிறை கைதிகளுக்கும், 27 சிறை ஊழியர்களுக்கும் முதற்கட்ட பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் மாலை சிறை துறையினருக்கு வந்தது. தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளிடையே 5 மணி நேரம் ஆலோசனை நடந்தது.  

எத்தனை பேருக்கு வந்தது, இது எப்படி தொற்றிக்கொண்டது, பாதிக்கப்பட்டவர்களை எங்கு வைத்து சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வயது முதிர்ந்த 5 கைதிகளை அதிகாலை 3 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் 25 பேரை சிறை வளாகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர ஒரு தூய்மைப்பணியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில சிறை ஊழியர்களின் பரிசோதனை முடிவு வராததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து, சிறைக்காவலர்கள் சிலர் கூறியதாவது:

தண்டனை சிறையில் உள்ள சுமார் 700க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் 10 ஆண்டு, 5 ஆண்டு, 2 ஆண்டு என பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். இதில் சிறையில் நன்னடத்தை பெற்ற கைதிகள் சிறை வெளியிலுள்ள சிறைத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள வீடுகளில் தினசரி காலை நேரங்களில் வந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். முகக்கவசம், கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவர்கள் சிறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்த்து வந்தனர். இதனால் வெளியில் வந்த கைதிகளுக்கு இந்த கொரோனா தொற்று உறுதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதிகாரிகளுக்கு துணையாக இருந்த காரணத்தால் இன்றைக்கு கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு என அரசு ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து எந்த தண்டனை கைதியும் புதிதாக சிறைக்குள் வரவில்லை. இவர்களை சிறைக்குள் வந்து பார்க்கவும் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களுக்கும் தடை செய்யப்பட்ட நிலையில் சிறையில் தண்டனை பெற்று வரும் நன்னடத்தை கைதிகள் சிறை அதிகாரிகள் வீடுகளில் அவருடைய அனுமதியுடன் தினசரி வீட்டு வேலைகளை செய்து வந்ததன் விளைவாக அவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம்.

 கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், புழல் 22, 23வது வார்டு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சிறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிறையில் இருந்து உத்தரவு தங்களுக்கு வந்தால் மட்டுமே அங்கு சென்று கிருமிநாசினி தெளித்தல், பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சிறைக்காவர்கள் குடியிருப்பு வளாகத்தில் கூட கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை. எனவே, அங்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிறைக்காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தண்டனை கைதிகள் எத்தனை பேருக்கு, யாருக்கு பாதிப்பு என்பது குறித்த விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் யாரும் முழுமையாக தெரிவிக்கவில்லை.

இதுபற்றி விவரங்களை அறிய செய்தியாளர்கள் சிறை அதிகாரிகளின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டால் அழைப்புகளை எடுப்பதில்லை. இதனால் சிறை வளாகத்தில் முழுமையாக பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு என்பதை சிறை அதிகாரிகள் மறைக்கிறார்களா என சந்தேகம் எழுகிறது. தினந்தோறும் சுகாதாரத்துறை அறிக்கையில் பாதிப்பு நிலவரங்களை தெரிவிப்பது போல, கைதிகள் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிறைத்துறை நிர்வாகமோ, அல்லது தமிழக சுகாதாரத்துறையோ வெளியிட வேண்டும் என சிறைவாசம் அனுபவித்து வரும் தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: