கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை: ஜூன் 3ம் தேதி முதல் அமல்

சென்னை: கொரோனாவிற்கு சித்த மருத்துவ முறையில் முழுக்க முழுக்க சிகிச்சை அளிக்கும் முறை ஜூன் மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்போது வரை 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலையில் முழுவதும் சித்த மருத்துவ அடிப்படையில் முழுக்க முழுக்க கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை செயல்படுத்த சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டு வருகிறது.  

இது குறித்து சித்த மருத்துவர் வீரபாகு கூறியதாவது:  கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு தற்போது கூட்டு மருந்து முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சித்த மற்றும் அலோபதி மருத்துவம் இணைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி வைஷ்ணவா கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சித்த மருத்துவ முறை மருந்துகள் நல்ல பலனை அளித்தது. அதனைத் தொடர்ந்து முழுவதும் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 3ம் தேதி முதல் இந்த வார்டு செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: