×

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை

* ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால் திறப்பு
* பள்ளி, கல்லூரிகள் திறப்பது பற்றி ஜூலை மாதம் முடிவு
* இரவு 9 மணிக்கு மேல் நடமாட தடை
* கட்டுப்பாட்டு பகுதியில் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், தேசிய ஊரடங்கை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அது அறிவித்துள்ளது. அதில், நோய் தொற்று பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.  பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி ஜூலையில் முடிவு செய்யப்பட உள்ளது. மேலும், இரவு 9 முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.

4ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிய உள்ள நிலையில், ஜூன் 1 முதல் முழு விலக்கு அளிக்கப்படுமா அல்லது 5ம் கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இது பற்றி மாநில முதல்வர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை 2 வாரத்துக்கு நீட்டிக்கும்படி வலியுறுத்தினர். இந்நிலையில், ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், யாரும் எதிர்பாராத வகையில் தேசிய ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்,  பாதிப்பு அதிகமுள்ள நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் எந்த புதிய தளர்வுகள் இல்லை. வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். வெளி இடங்களில் யாரும் அத்தியாவசியமின்றி கட்டுப்பாடு பகுதிகளுக்கு செல்லக் கூடாது.

அப்பகுதியில் இருந்து யாரும் வெளியில் செல்லக் கூடாது. வீடு வீடாக கண்காணிப்பு பணிகள் தொடர வேண்டும். கட்டுப்பாடு பகுதிகளுக்கு அருகாமையில் பாதிக்கப்படும் அபாயமுள்ள பகுதிகளிலும் தேவைப்பட்டால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
இதுதவிர, பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, படிப்படியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை வருமாறு:

* முதல் கட்டமாக ஜூன் 8ம் தேதி முதல் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், ஷாப்பிங் மால்களை திறக்கலாம். அதே சமயம் சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
* 2ம் கட்டமாக, ஜூலை மாதத்தில், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கலாம். பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களின் கருத்தை அறிந்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.
* 3ம் கட்டமாக, சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான தேதியை முடிவு செய்யலாம். மேலும், சினிமா தியேட்டர், ஜிம், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவற்றை பாதிப்பை பொறுத்து திறப்பதற்கான தேதியை மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இதே போல், சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கலாம்.
* அனைத்து பகுதிகளிலும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசியமின்றி யாரும் வெளியில் நடமாடக் கூடாது.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
* பஸ்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது
* தேசிய பேரிடர் மேலாண்மை சட்ட வழிகாட்டுதல்களில் எந்த சமரசமும் இன்றி மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.  இதனால் தேசிய ஊரடங்கு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக படுதீவிரமடைந்துள்ள நிலையில், நாளை முதல் நாடு முழுவதும் பெருமளவு இயல்பு வாழ்க்கை திரும்ப இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள், மாவட்டத்துக்கு அனுமதி இன்றி செல்லலாம்
தற்போது, வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மக்கள் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி சீட்டு பெற்று செல்பவர்கள், செல்லும் இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில், இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி,
* மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கும் தனிநபர்கள், சரக்கு வாகனங்கள் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
* மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து வாகனங்களை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது.
* நோய் பாதிப்பை பொறுத்து வெளி மாநில தனிநபர் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துக் கொள்ளலாம்.

தமிழக அரசு இன்று அறிவிப்பு
மத்திய அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலம் செல்வதற்கும் இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பான முக்கிய முடிவுகளை தமிழக அரசு இன்று வெளியிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவை கட்டாயம்?
* பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
* 6 அடி தனிநபர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
* கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி உறுதிபடுத்தப்பட வேண்டும். 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
* பொது இடத்தில் கூட்டம் கூடுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 50 பேர் வரையிலும் மட்டுமே அனுமதி.
* துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை தொடரும்.
* பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
* பொது இடத்தில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை நீடிக்கிறது.

‘ஒர்க் அட் ஹோம்’ அனுமதி
* வீட்டிலிருந்து பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். அதிக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* அலுவலகங்களில் முறையான பணி நேரம் பராமரிக்கப்பட வேண்டும்.
* உள்ளே நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும் கிருமிநாசினி வைக்க வேண்டும்.
* கதவு கைப்பிடிகள் அருகிலும் கிருமி நாசினிகள் வைக்கப்பட வேண்டும்.
* பணியிடங்களில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

Tags : Central Government , Curfew, central government, national curfew, corona, curfew
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...