×

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் அறிவிக்க வேண்டாம்: மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பேருந்து உள்ளிட்ட எந்த தளர்வும் அறிவிக்க வேண்டாம் என்றும், அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல்ம் தேதி (இன்று) வரை 4 கட்டங்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, அரசு  மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், பொது போக்குவரத்தான மின்சார ரயில், பேருந்துகள் தமிழகத்தில் இன்னும் ஓடவில்லை. வழிபாட்டு தலங்கள், தியேட்டர், திருமண மண்டபங்கள், மால், பூங்காக்கள், சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது உள்ளிட்ட சிலவற்றுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, புதிய தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல மாவட்ட கலெக்டர்கள் ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும்,  ஆனால் பொது போக்குவரத்து, வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரஸ் அதிகம் பரவும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த  தளர்வும் வேண்டாம் என்று கலெக்டர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம், டாக்டர் குகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் டாக்டர் பிரதீப் கவுர், ராமசுப்பிரமணியம், குகானந்தம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா என்பது ஒரு புது வைரஸ். மற்ற நாடுகள் மற்றும் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். புதுப்புது கோணத்தில் இதன் தாக்கம் உள்ளது. இதுபற்றி முதல்வரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகம் என்பதே இதற்கு காரணம். இந்தியாவில் பார்த்தோம் என்றால், 70 சதவீதம் நோய் மொத்தம் சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இருந்துதான் வருகிறது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமாக இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதே மாதிரி சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

அப்படியே அதிகமாக வந்தாலும் உயிரிழப்பு குறைவாகத்தான் உள்ளது. அதிக நோயாளிகள் இருந்தாலும், அதை சமாளிக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களில் அதிகம் பேர் இந்த நோயால் பாதிக்கிறார்கள். இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்றால், பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அப்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும். எண்ணிக்கை அதிகமாகும்போது மக்கள் பயப்பட கூடாது. அப்போதுதான் நோயை கட்டுப்படுத்த முடியும். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் வந்தால் அல்லது பக்கத்தில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற அறிகுறி இருந்தால் உடனே சரியான மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது, வேலை செய்யும் இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும். ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் அனைவரும் மாஸ்க் போடுவதால்தான் 99 சதவீதம் கண்ட்ரோல் பண்ணி விட்டார்கள்.

மாஸ்க் போடுவதற்கு முக்கியத்துவம் அளிக்காத நாடுகளில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும், அரசு நிறைய தளர்வுகள் அறிவித்துள்ளது. ஆனால், மருத்துவ குழு அரசுக்கு என்ன பரிந்துரை செய்துள்ளது என்றால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். அங்கெல்லாம் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அங்கு ஊரடங்கு தொடர வேண்டும். எல்லா தளர்வுகளையும் கொடுக்க முடியாது. அதனால் தமிழகம் முழுவதற்கும் ஒரே நடைமுறையை பின்பற்றாமல் கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கலாம். சென்னை போன்ற நகர் பகுதிகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்பார்த்த விஷயம்தான்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நோய் வராமல் சமாளிக்கும் திறமை மக்களிடம் வந்துள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் தற்காப்பு செய்து கொண்டால் போதும், இந்த வைரசை தடுத்து விடலாம். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு இருந்தாலும் அதிகமான தளர்வுகள் உள்ளது. இன்னும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஓடுவது, கல்யாண மண்டபம் திறப்பது, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, மால்களை திறப்பது மட்டும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆனால் சென்னை மாநகரத்தில் இப்போது இருக்கும் நிலைமையில் இதையெல்லாம் அனுமதித்தால் அதிக உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

அதனால் கொஞ்சம் மெதுவாக விடலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். தளர்வு ஏற்படும்போது மக்கள் எங்கு கூடுகிறார்களோ அங்கு முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும். தமிழகத்தில் சமூக பரவல் இதுவரை ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டால், இறப்பு அதிகரித்து விடும். தற்போது அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம், அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு ஏதோ ஒரு நோய் இருந்ததால் இறந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாஸ்க் போடாமல் யாரிடமும் பேசக்கூடாது
வெளியில் மக்களை சந்திக்கும்போது மாஸ்க் போட்டுக் கொண்டுதான் பேச வேண்டும். சிலர் பேசும்போது மாஸ்கை கீழே இறக்கி விட்டு பேசுகிறார்கள். அது தவறான நடைமுறையாகும். நோய் வந்தவுடன், மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். இருமும்போது, தும்மும்போது கையை வைத்து மூடியபடி இரும பழகிக் கொள்ள வேண்டும். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போதும் கை, கால்களை கண்டிப்பாக கழுவ வேண்டும். வீட்டில் உள்ள வயதானவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறியவர்களுக்கு வந்துவிட்டு உடனே போய் விடும். ஆனால், வயதானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிறைய நோயாளிகளை கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க இறப்பை குறைக்க முடியும். இந்த கொரோனா வைரஸ் நோயில் இருந்து விரைவில் விடுதலையாகி விடுவோம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர்.


Tags : Chennai ,Chengalpattu ,Thiruvallur ,districts ,Kanchi , Chennai, Chengalpattu, Kanchi and Thiruvallur districts
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி