பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு நடத்துவது சாத்தியமா?

* கொரோனா பரவாது என்ற உத்தரவாதம் உண்டா?

* கல்வியாளர்கள், பெற்றோர் எழுப்பும் சந்தேகம்

சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வுகள், வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு வாரங்களாக நாள்தோறும் சராசரியாக 800 பேருக்கு குறையாமல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,”மாணவர்கள் வீட்டிலிருந்து வந்து தேர்வெழுதிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்வதற்குள் போக்குவரத்து, தேர்வு மையம் என எங்கு வேண்டுமானாலும், யார் மூலமாகவும் கொரோனா தொற்றிற்கு ஆளாக நேரிடும்.

ஒவ்வொருவரையும் பாதுகாப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு மையத்திற்கு வருவதற்கு பிரத்யேக பஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு பஸ்சுக்கு அதிகபட்சம் 30 மாணவர்களை ஏற்றினாலும், தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் வசதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இதுவரை தேர்வு மையம் மற்றும் இதர நடவடிக்கைகள் தொடர்பாகவும், கூடுதலாக அலுவலர்களை நியமிப்பது தொடர்பாகவும் எந்தவித ஆலோசனை கூட்டமோ, கலந்துரையாடலோ நடைபெறவில்லை. இதனால்,பள்ளிக்கல்வித்துறையினர் பலரும் தேர்வை நடத்த ஆர்வம் காட்டாதது உறுதியாகிறது. எனவே,மாணவர்களின் பாதுகாப்பு கருதி,தேர்வை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,”என்றனர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அரங்க.வீரன் கூறுகையில், உயிரிழப்பில் சீனாவை மிஞ்சும் வகையில், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முதலில் கொரோனாவை ஒழித்து, உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் தான் எதுவுமே. இதை கண்டுகொள்ளாத அரசாங்கம், தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வைத்து விளையாடி வருகிறது. சுமார் 10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடிய தேர்வு நடவடிக்கைகளில், ஒரு சதவீதம் கூட கொரோனா பரவாது என எந்த நம்பிக்கையில் அரசு உள்ளது என தெரியவில்லை. தற்போது பாதிக்கக்கூடியவர்களில், 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, மாணவர்களும், ஆசிரியர்களும் எப்படி தங்களை தற்காத்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.எனவே,கொரோனா கட்டுக்குள் வரும் வரை காத்திருப்பதே தற்போதைக்கு சிறந்தது என்றார்.

ஆசிரியர்கள் எழுப்பும் கேள்விகள்

* ஒரு மையத்தில் தேர்வெழுதும் மாணவருக்கோ அல்லது அங்கு பணிபுரியும் ஆசிரியருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் பரிசோதனை நடத்தி, அதன் முடிவை வெளிப்படையாக அறிவிக்க அரசு தயாராக உள்ளதா?

* சம்பந்தப்பட்ட தேர்வு மையம் முழுமையாக மூடப்படுமா? அப்படி மூடினால், அடுத்தடுத்த தேர்வு எங்கு நடத்தப்படும்?

* கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறி இல்லாமல் வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் குடும்பத்தினருக்கு கொரோனா பரவாதா?

* கூடுதல் மையங்களுக்கு, வினாத்தாளை கொண்டு செல்வது எப்படி? அதை கொண்டு செல்பவர்கள், விடைத்தாள் பெற்று வருபவர்கள் மூலம் ஒரு மையத்திலிருந்து, மற்றொரு மையத்திற்கு கொரோனா பரவாதா?

மன அழுத்தம் அதிகரிக்கும்

மனநல ஆலோசகர்கள் கூறுகையில்,”கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தேர்வு நடக்குமா? நடக்காதா?என்ற சந்தேகமும், குழப்பமும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மட்டுமின்றி ஆசிரியர்கள் தரப்பிலும் மேலோங்கி உள்ளது. இதை ஒருவித மன அழுத்த நோய் என கூறலாம். தேர்வு நடந்தாலும், நமக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்களுக்கு  இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மன அழுத்தத்தில் மாணவர்களால் எப்படி தேர்வை எதிர்கொள்ள முடியும்? எனவே கொரோனா பயத்தை முற்றிலும் போக்கிய பின்னர் தேர்வை நடத்துவதே சிறந்தாக இருக்கும்,” என்றனர்.

Related Stories: