×

மீனவர் குடும்பங்களுக்கு தினமும் 500 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஊரடங்கு காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா 500 வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் மவுரியா ஆஜராகி, மீன்பிடி தடைகாலத்தில் நாட்டுப் படகுகளை மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறும், ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்துக்கு தினமும் தலா 500 வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.  அப்போது, தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் ெஜயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள 13 கடற்கரையோர மாவட்டங்களில் 4 லட்சத்து 63,256 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடை காலத்திற்கு தலா 5ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் 92.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஊரடங்கு நிவாரணமாக தமிழ்நாடு மீனவர் நல வாரியம் சார்பில் மீனவர் குடும்பங்களுக்கு தலா 1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீன்பிடி தடை காலத்தை 61 நாளிலிருந்து 47 நாளாக மத்திய அரசு குறைத்துள்ளது என்றார். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மனுதாரர் கூறுவதுபோல் ஊரடங்கால் மீனவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையின்மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : Government ,families ,fishermen ,Madras High Court , Fishermen Families, Government of Tamil Nadu, High Court of Chennai
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...