×

‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:  திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: நாட்டில் முன்னேற்பாடு இல்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பெருபான்மையானோரின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளானது. கலைஞர் அரங்கத்தைத் தனி மருத்துவ வார்டுகளாகப் பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு ஒப்புதல் கொடுத்தோம். ‘ஒன்றிணைவோம் வா’என்ற திட்டத்தைத் தொடங்கினோம். பொதுமக்கள் உதவி கோரும் மையமாகவே எனது அலுவலகம் செயல்பட்டது. கடந்த 40 நாட்களில் 18 லட்சம் பேர் எனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அந்த உதவிகளைப் பட்டியலிட வேண்டுமானால், பல மணிநேரம் ஆகும். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை; ஒரு ஆளும்கட்சி நினைத்தால் செய்ய முடிந்ததை, நாம் செய்து காட்டி இருக்கிறோம்.

மக்கள் நம்மிடம் வைத்த கோரிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதே தெளிவாகத் தெரிகிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்துவிட்டோம். மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கு உள்ளது. மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் ஒப்படைத்துள்ளோம். ஏழு லட்சம் கோரிக்கை மனுக்களை, மாவட்ட வாரியாகப் பிரித்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டத் தொடர் முயற்சிகளை திமுகவின்மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன். இந்தக் கடினமான சூழ்நிலையிலும் திமுகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாங்கங்கள் இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால், அந்த அரசாங்கம் குறித்துக் கவலைப்படாமல் நமக்கு நாமே துயரங்களைத் துடைக்க முடியும் என்பதை ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் உணர்த்தி இருக்கிறது. ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக நான் கண்டது நம் மக்களின் நம்பிக்கை! நம் மக்களின் இரக்க குணம் இதன் மூலமாக நமக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறக்கிறது. ஒன்றுபட்டு தமிழகத்தின் பெருமையை, வளத்தை மீண்டும் மீட்டெடுப்போம். அதுவரை நானும் தி.மு.கழகமும் ‘உங்களின் குரலாக இருந்து ஒலிப்போம்; உங்களுடன் துணைநிற்போம்’.ஒன்றிணைவோம் வா. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags : families ,millions ,MK Stalin ,Joint Voice , Come together, families, MK Stalin
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....